இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1857 இல் தொடங்கியது. அது படிப்படியாக வேகம் எடுத்தது. வீரர்கள் அடிமை விலங்கை ஒடிப்பதற்காக துடிப்புடன் செயல்பட்டார்கள். துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்கள். நாய்நாட்டிற்காக இன்னுயிரை நீக்கவும் தயாராயிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு 1919.

ஒத்துழையாமை இயக்கம் 1919 இல்தான் தொடங்கப் பெற்றது.

“ஆங்கில ஆட்சியாளர்களுக்கு, ஆட்சி செய்வதில் ஒத்துழைப்பு அளிப்பது கூடாது. இதற்காக மாணவர்கள் கல்வி நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும். அலுவலர்கள் அலுவலகங்களை செல்லக்கூடாது.” இதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ஆகும்.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். முன்னதாக காந்தியடிகள், தென்னாப்பிரிக்காவில் – டர்பன் நகரில் நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றவர் ஆவார். காந்தியடிகளின் கொள்கைகளாலும், சொற்பொழிவுகளாலும் ஈர்க்கப்பட்டு பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஆண்டு 1919.

தேசப்பிதா காந்தியடிகளும், தமிழர் தலைவர் தந்தை பெரியாரும் காங்கிரஸில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கிய ஆண்டு 1919.

மேலை நாட்டு மோகம் கூடாது என்றார் காந்தியடிகள். அந்நியநாட்டுத் துணிகளை அணியக்கூடாது என்றும் கட்டளையிட்டார். நமது நாட்டில் மிகுதியாகப் பருத்தி உற்பத்தி ஆகிறது. அந்தப் பருத்தியிலிருந்து தயாரித்த நூல் ஆடை-கதர் ஆடை ஆகும். எனவே நாம் எல்லோரும் இனி கதர் ஆடையை உடுத்த வேண்டும். ஆண்கள் கதர்சட்டை, கதர் வேட்டி, கதர் துண்டு அணிய வேண்டும். பெண்கள் கதர் புடவையும், ஜாக்கெட்டும் அணிய வேண்டும் என்றார் காந்தியடிகள்.

காந்தியடிகளின் கூற்றை ஏற்றார் பெரியார். கதர் உடுத்தாதவன் பதர் என்று தூற்றினார். கதரின் பெருமைபற்றி,

“ஏதமில காந்தியடிகள் அறச்செயல்
வெல்லும் – வெல்லும் – வெல்லும்
கன்னல டாஎங்கள் காந்தியடிகள் சொல்
கழறுகி றேன் அதைக்கேளே – நீவிர்
காதணி வீர்உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே – தூளே – தூளே.”

என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

காந்தி சொல்லை ஏற்று பெரியார் தான் அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளை அகற்றினார். எளிமையும் தூய்மையும் நிறைந்த கதர் ஆடைக்கு மாறினார். கதர் நம் இந்தியத் திருநாட்டின் தேசிய ஆடை என்பதை உணர்ந்தார்.

பெரியார் தான் மட்டும் கதர் அணிந்ததோடு நிறைவடையவில்லை. தன்வீட்டார் அனைவரையும் கதர் அணியும்படி வற்புறுத்தினார். சுற்றத்தார், நண்பர்களுக்கெல்லாம் கதரின் பெருமையை எடுத்துக் கூறினார்.

நாகம்மையார் கதருக்கு மாறினார். பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மையார் எப்போதும் பளிச்சென்று பட்டுச்சேலைதான் கட்டுவார். அவர் கதர் சேலைக்கு மாற மனம் இடம் தரவில்லை. கதர் பட்டுப்புடவையைவிட கனமானது. அதனால் என்னால் கட்ட முடியாது என்றார் பெரியாரின் தாயார். உடனே பெரியார் தராசு ஒன்றை எடுத்தார். மற்றொரு தட்டில் பரித்திச்சேலையை (கதர்) வைத்தார். பருத்திச் சேலைதான் எடை குறைவு என்று அம்மாவுக்கு நிரூபித்துக் காட்டினார். அதன் பிறகு பெரியாரின் அம்மா கதர் சேலைதான் கட்டினார்.

பெரியார் ஊர் ஊராகச் சென்றார். கதரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார். காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, மற்றவர்களையும் கதர் ஆடை உடுத்தச் செய்த பெருமை தமிழ்நாட்டில் பெரியாரையே சாரும்.

கதர் இயக்கத்தை காங்கிரஸ் இயக்கத்தின் கண் என மதித்தார் பெரியார். இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ‘கதர் வஸ்திராலயங்கள்’ தோன்றுவதற்குப் பெரியாரே முழு முதல் காரணமாவார்.

திருச்செங்கோடு ஆசிரமமும் பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதே ஆகும். இதன் நார்வாகியாக ராஜாஜி இருந்தார்.

பெரியார் அவர்கள் ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார். கதர்த் துணி அணிவதுபற்றிய பிரசாரத்திலும் அவ்வாறே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். கதர்த் துணிமூட்டையை தலையில் சுமந்து…. விற்று வந்தார்.

அடுத்ததாக பெரியார் கள்ளுக்கடை மறியலில் கவனம் செலுத்தினார்.

“துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்”

என்பது தமிழ்மறை.

கள் குடிப்பவர்கள் இறந்தவர்களுக்குச் சம்மானவர்கள் என்று வள்ளுவர் குடியின் கெடுதலை கடுமையாக எடுத்துரைப்பார்.

அண்ணல் காந்தியடிகள் மது அருந்துவதின் தீமைகளை மக்களுக்கு விளக்கிக் கூறினார். பாமர மக்களும் வறுமையில் வாடுபவர்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி துன்ப்ப்படுவதைக் கண்டு அண்ணல் மனம் பதைபதைத்தார்.

மதுவிலக்குக் கொள்கை காங்கிரஸின் முக்கியக் கொள்கையில் ஒன்றாயிற்று. வட இந்தியாவில் தென்னை மரங்களிலிருந்து கள் எடுப்பார்கள். எனவே காந்தியடிகள் ஈச்ச மரங்களையும் தேன்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தச் சொன்னார்.

காந்தியடிகள் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசமாட்டார் பெரியார். தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியலை மிகப் பெரிய அளவில் நடத்திக் காட்டியவர் நந்தமிழ்ப் பெரியார்.

ஈரோட்டில் பெரியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. அதில் 500 தென்னை மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்திருந்தன. காந்தியடிகள் கட்டளையை ஏற்று பெரியார் அவர்கள் 500 தென்னை மரங்களையும் வேரோடு வெட்டி வீழ்த்தினார். மதுவிலக்குக் கொள்கையில் பெரியார் எடுத்த மகத்தான முடிவு இது. மாநிலமே வியந்து பார்த்தது.

தனக்கு என்றால் ஒருவழி; தம்பிக்கு என்றால் வேறு வழி என வாழ்ந்து வரும் இந்த நாட்டில் கொள்கைக் குன்றாகத் திகழ்ந்தார் பெரியார்.

கள்ளுக்கடை மறியலையும் தாமே முன்நின்று நடத்தினார் பெரியார். ஈரோட்டுத் தெருக்களில் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி 1921 இல் கள்ளுக்கடை மறியலில்ஈடுப்படார் பெரியார். இதனால் பெரியாரும் அவருடன் மறியலில் ஈடுபட்டத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

பெரியார் சிறையில் அடைக்கப்பட்டதால் ஈரோடில் கலவரம் மூண்டது. ஆனாலும் அரசாங்கத்தால் கலவரத்தை அடக்க முடியவில்லை. அடக்கத்தின் அணிகலன்களாகத் திகழும் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்; பெரியாரின் அன்புத் துணைவியார் நாகம்மையார் தலைமையில் பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கள்ளுக்கடைமறியலில் ஈடுபட்டார்கள். பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் மறியலில் கலந்துபொண்டார். எழுச்சிமிக்கப் போராட்டமாக வெடுத்தது. மறியலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். இவர்களை கைது செய்தால் சிறையில் அறைகள் போதாது என்று திகைத்தார்கள் அதிகாரிகள்.

ஆங்கில அரசு அச்சம் கொண்டது. மது அருந்தாமலே அரசு தள்ளாடியது. வேறுவழி இன்றி தடை உத்தரவை நீக்கி ஆணை பிறப்பித்தது அரசு.

தேச நலம் கருதி தன் குடும்பத்தையே போராட்டக்களத்தில் இறக்கிய போர்வீரன் – புகழ்மறவர் -புத்துலக சித்தனையாளர் பெரியார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அம்சம். நீதிமன்றங்களைப் புறக்கணித்தல். வழக்கறிஞர்கள் வழக்காடச் செல்லமாட்டார்கள். இதனையும் பெரியார் செவ்வனே நிகழ்த்திக் காட்டினார்.

பெரியார் அவர்களுக்கு சுமார் 5000 ரூபாய் வரை ஒருவரிடமிருந்து பணம் வரவேண்டியுருந்தது. அந்தப் பணம் வருகிற வழியாகத் தெரியவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்தால் அந்த ரூபாயைப் பெற்றுவிடலாம். ஆனால், பெரியார் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவர் அந்த ரூபாயைப்பற்றிக் கவலைப்படவில்லை.

அதே சமயம் அப்போது சேலம் மாவட்டம் காங்கிரஸ் தலைவராக C. விஜயராகவாச்சாரி இருந்தார். அவர் பெரியாரிடம் சென்றார். அந்த 5000 ரூபாய் வசூல் செய்வதற்கா எனக்கு அனுமதி தந்து நீதிமன்றத்திற்கு ஒரு மடல் தாருங்கள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். மேலும் அப்பணத்தை திலகர் பெருமானின் சுயராஜ்ஜிய நிதியில் சேர்த்துவிடலாம் என்றும் எடுத்துக் கூறினார்.

பெரியார் சிறிதும் தயங்காது சொன்னார். “நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான். இது என் கொள்கைகளுக்கு ஒத்ததல்ல. கொள்கையே பெரிது, பணம் பெரிதல்ல”.

விஜயராகவாச்சாரி விக்கித்து நின்றுவிட்டார்.

காங்கிரஸ் பேரியக்கக் கொள்கைகளிலும், உத்தமத்தலைவர் காந்தியடிகளிடமும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தார்.