கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார்.

தொடக்க காலத்தில் காந்தியடிகளின் கொள்கைளினால் கவரப்பட்டவர் பெரியார். காந்தியடிகளின் முக்கியக் கொள்கையான தீண்டாரையை அவர் பெரிதும் ஆதரித்தார். அதனால்தான் காங்கிரஸ் பேரியக்கத்தில் பெரியார் சேர்ந்தார்.

காந்தியடிகளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. பெரியார் மனம் வருந்தினார். காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியேறினார்.

தமிழர் இனம் தாழ்வுற்றுக் கிடக்கிறது. தமிழரின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் பெரியார். அதனைச் செயல்படுத்த சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.

சுயமரியாதை இயக்கம் அரசியல் கட்சி அல்ல. அது சமுதாய சீர்கேட்டினை அழிக்கவும் மக்களிடையே சமத்துவத்தை ஆக்கவும் எழுந்த ஓர் இயக்கம் ஆகும் சுயமரியாதை இயக்கம்.

பின்னர் தந்தை பெரியார் அவர்கள் பல மேலை நாடுகள் சென்றார். அங்கு நிலவி வரும் சமுதாய அமைப்புகளைப் பார்த்தார். குறிப்பாக ரஷ்ய நாட்டின் கொள்கைகள் அவரைப் பெரிதும் சிந்திக்க வைத்தன. ரஷ்யாவில் மட்டும் மூன்று மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதை நாம் முன் அத்தியாயத்தில் பார்த்தோம்.

மேலை நாடுகள் சுற்றுப்பயணம் தந்தை பெரியாரின் உள்ளத்தில் பல புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தது. எனவே அவர் சுயமரியாதை இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றலாம் என சிந்தித்தார்.

1932 டிசம்பர் மாதம் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றலாமா? என்பதுபற்றிய விவாதம் எழுந்தது. சுயமரியாதை இயக்கத் தொண்டர்களும் அறிஞர்களும் கலந்து பேசினர். அவரவர் கருத்தை வெளியிட்டனர்.

“சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கை வேண்டாம். சமூக இயக்கமாகவே இருந்து வேலை செய்தால் போதும். அரசியல் இயக்கமாக மாறினால் நீதிக் கட்சியைப் போலவே இதுவும் சமூக சீர்திருத்தங்களைச் சரிவர செய்ய முடியாமற்போய்விடும்” என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பெரியார் இக்கருத்துகளை எல்லாம் மனத்தில் இருத்திக் கொண்டார். ஏற்கெனவே சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தனர்.

பின்னர் சுயமரியாதை இயக்கத்திலும் பல திட்டங்களை நீதிக்கட்சியும் ஏற்று செயல்பட்டது என்றாலும், பெரியார் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட முடியவில்லை.

எனவே திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய இயக்கத்தைப் பெரியார் உருவாக்கினார். 27-8-1944இல் ‘திராவிடர் கழகம்’ உருவாக்கப்பட்டது.

“திராவிடர் கழகம் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை. சீர்திருத்த பிரசார ஸ்தாபனம் ஆகும்” என்று திராவிடர் கழகத்தின் இலட்சியத்தை தெளிவாக எடுத்துக் கூறினார்.

கறுப்புச் சதுரத்தின் நடுவில் சிவப்பு வட்டம். இதுவே திராவிடர் கழகத்தின் கொடி ஆகும். கொடியும் 1944-லியே உருவாக்கப்பட்டது. மக்கள் இழிநிலையில் வாழ்கிறார்கள் என்பதைக் குறிக்க கறுப்பு நிறம், புரட்சியைக் குறிக்க சிகப்பு நிறம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே பெரியார் அமைச்சரவை அமைக்க அழைக்கப்பட்டார். பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மீண்டும் விடுதலை பெற்ற பின்னர் ராஜாஜி அவர்கள் பெரியாருக்குப் பதவி அளிக்க முன்வந்தார். ஆனால் பெரியார் அவர்கள் அதனையும் உதறித் தள்ளினார்.

பதவிகளை என்றுமே அவர் பெரிதாக மதிக்கவில்லை. மாறாக பெரியார் அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் எப்போதும்போல் தீவிர ஈடுபாடுகொண்டு தொண்டாற்றி வந்தார்.

“குருட்டு நம்பிக்கைகளை அழிவு வேலைகள் மூலம்தான் ஒழிக்க முடியும். அதற்கு மகத்தான உறுதி தெளிவு தேவை. பழிப்பிற்கும், சாவிற்கும் கவலையற்ற துணிவு உள்ளவர்களால்தான் அது முடியும்” என்று கூறுவார் பெரியார்.

இலட்சியவாதி பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் திராவிடர் கழகத்தின் வாயிலாக செயலாக்கம் பெற்றன.

மக்கள் விழிப்புணர்வு பெறக் காரணமாக இருந்தது திராவிடர் கழகம்.

சிறு கருத்து வேற்றுமையால் 1949ஆம் ஆண்டு அண்ணா திராவிடர் கழகத்தினின்று வெளியேறினார். திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதுக்கட்சித் தொடங்கினார். ஆனாலும் திராவிடக் கழப்பணி தொய்வின்றி தொடர்ந்தது.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் திராவிடர் கழகத்தின் தூண்களாகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.