செல்வச் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால், பிறர் தயவில், ஆதரவில் வாழவேண்டிய நிலைக்கு என்றும் ஆளாகாதவர் பெரியார். சிறு வயது முதலே எதையும் – தமது அறிவுக்குட்பட்ட வகையில் ஆராயும் மனப்பான்மை கொண்டவர். ஒருவகையில் இயற்கையிலேயே ‘சுதந்திர’ உணர்வு கொண்டவர். மற்றவர்கட்கு அஞ்சுவதும், அடங்குவதும், கட்டுத் திட்டங்களை ஏற்பதும் அவருக்கு இயல்பல்ல.


உலகத்தார் நம்பிக்கைகளையும், செயல்களையும் தாம் கண்டறியும்போதேல்லாம் அவற்றைக் கூர்ந்து நோக்கி, அவை ஏன்? எப்படி? எதனால்? என்னும் முறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். தமக்குத் தோன்றும் உண்மையை மற்றவர்களிடம் உரைத்து அவர்தம் பதிலையும் ஆராய முற்படுவார்.

முறையான பளிளிப்படிப்பு முக்கியத்துவம் பெறாத காலமாகையால், அவருக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லை அதைக் கண்ட பெற்றோர்கள் அவரைத் தமது வாணிகத் தொழிலிலேயே ஈடுபடுத்தினர். அதுவும் ஒருவகையில் நாட்டுக்கே நன்மையாயிற்று எனலாம். முறையான பள்ளிப் படிப்பும் ஆசிரியரிடம் பாடம் கேட்கும் முறையும் ஒருவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிடக்கூடிய ஒரு பழமைச் சுவடு அவருள்ளத்தில் பதியாமல் தப்பினார் எனலாம்.