பெரியார் அவர்களின் அறிவுக் கூர்மையானது; சுறுசுறப்பானது; நினைவாற்றல் மிக்கது; ஓய்வை ஏற்காதது; எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ தான் இருப்பார். புதிது புதிதாக அறியக் கூடியவற்றை அறிந்து – தெளிவதிலே அவருக்குப் பேரார்வம்.


இயல்பிலேயே அவரிடம் காணப்பட்ட ஊக்கம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி, மடியின்மை ஆகயவையே, முதிர்ந்த வயதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னரும் தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத போதும், தமது குறிக்கோள் வெற்றிப்பெற, நாடு நகர் பட்டி தொட்டி எங்கும் மக்களைச் சந்தித்துத் தமது கொள்கைகளை எடுத்துக் கூறி விளக்கும் ‘இலட்சியப் பயணம்’ மேற்கொள்ளக் காரணமாயிற்று எனலாம். அந்தக் கடுமையான உழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றுப் பயணத்தில்தான் அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி, மனநிறைவு! ‘உடல்’ வலிமை இழந்து தளர்ந்த போதும் ‘அறிவு’ உரம் குன்றாமலும், கூர்மை இழக்காமலும், ‘உள்ளம்’ ஊக்கம் தளராமலும் தொண்டார்வம் தடைப்பதாமலும் தந்தைப்பெரியார் அவர்கள் ‘ஓய்வை’ விரும்பாது இந்தச் சமுதாயத்துக்காக்க் பாடிபட்டார். சுறுசுறுப்பபு இயல்புகொண்ட அவரது அறிவே அவரை இயங்கவைத்தது எனலாம். அப்படிப்பட்ட ஒருவரை ‘உலகம்’ இதுகாறும் கண்டதில்லை.

பெரியார் அவர்கள் பெற்றிருந்த செல்வத்துக்கும், செல்வாக்குக்கும், தொண்டினால் அவர் அடைந்திருந்த புகழுக்கும் அவர் இருக்குமிடந்தேடிப் பல்லாயிரக் கணக்கானவர் வருவர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகோர்க்கு அறிவுரை வழங்கி இருக்க முடியும். எந்த ஒரு ஞானியும் மடாதிபதியும் அடையாத பெருமையோடு அவ்வாறு செய்திருக்க முடியும். ஆனால் – மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த தாயன்பும், தாமும் மற்றவர்களைப் போன்று ஒரு சராசரி மனிதனே என்னும் எண்ணமும், தொண்டுத செய்பவன் மக்களை நாடிச் செல்வதே முறை என்னும் கருத்தும், தமது கொள்கையை எதிர்நீச்சல் முறையில் எடுத்துச் சொல்லவேண்டியிருப்பதால் தாமே – அறியாமையில் மூழ்கியுள்ள மக்களைத தேடிச் செல்வதே தமது கடமை என்னும் ஆர்வமும் அவரை அப்படிப்பட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வைத்தன.