ஏடா! தமிழா! ஏனடா பிறந்தாய்!
வாடா, போடா, எனினும் ஏற்கலாம்.
மூடா, எனினும் தவறிலை பொறுத்தல்;
ஆடா? மாடா? பிறவியில் இழிந்திட!

இழிந்த பிறப்பெனில் வாழ்வும் இழியும்,
உயர்ந்த பிறப்பெனில் வாழ்வும் உயருமால்,
அயர்ந்த தமிழரிடை ஆரியர் திரித்தவாறு
இழிந்த பிறவியோ, தமிழின மாந்தர்!

பிறப்பினில் பேதம் கற்பனை செய்தோன்.
இறப்பினில் பேதம் எதனைக் கண்டான்?
பிறப்பினில் நால்வகை வருணம் பிரித்தோர்
சிறப்பினில் தமிழதைத் தாழ்த்தினரன்றோ?

உறுப்பினில், அறிவினில் குறையிலை எனினும்,
பிறப்பினில் இழிவை ஏற்றிடல் ஏனோ?
நால்வகை வருணம் நான்முகன் படைப்பெனில்
நான்முகன் பிறப்பும் நால்வருணக் கலப்போ?

மேல்வருணம் கீழ்வருணம் வகுத்த ஆசிரியர்
எவ்வருணம் என்பார், பஞ்சமர் தம்மை?
பஞ்சமர் தோற்றம் வெஞ்சமர்தனி லன்றோ?
அஞ்சாதவரைத் தீண்டவும் அஞ்சினர் அன்றோ?

நாவலந் தீவினில் நால்வருணம் படைத்தோன்,
மேனாடு தன்னில் எவ்வருணம் படைத்தான்?
கருப்பர் மண்ணில் நால்வருண முன்டோ?
வருணக் குலமுறை வெள்ளையர்க் குளதோ?

கற்பனைக் காரணம் காட்டுவார் தாம்காணார்;
முற்பிறவி, தலைவிதி, கரும்மெனப் பேசியே
கடவுள் படைப்பினை ஏற்பார் அறிவினை
மடமை இருளினில் மயக்கியே சாய்த்தனர்.

தெளிவிலாத் தமிழர் தேரும் வழியறியார்
எளியவ ராகியே ‘சூத்திரர்’ ஆனார்;
எதிர்த்து நின்றவர் ‘பஞ்சமர்’ ஆனார்;
ஏறியே அமர்ந்தவர் ‘பூதேவர்’ ஆனார்.

இந்நிலை எதனால்? இழிவும் எதனால்?
என்னும் சிந்தனை எழுப்பிய பெரியார்,
நன்னிலை எய்திடும் வழிதனை நாடுவார்,
தன்மான உணர்வே மருந்தெனக கண்டார்.

உணர்த்துவேன் உண்மை நாட்டவர் உணர்ந்திட,
ஊட்டுவேன் தமிழர்க்குத் தன்மான உணர்வினைக்
காட்டுவேன் எவர்க்கும் பகுத்தறிவுப் பாதை,
நாட்டுவேன் மானிட உரிமை என்றார், நாளும்!

நம்மவர்க்கும் ‘மானம்’ இருந்ததும் இலையோ?
நம்மவர்க்கு அறிவும் அழிந்தே போனதோ?
தன்மான இனமானத் தேவையை உணரார்,
தம்மின்மென எதைத்தான் காத்திட வல்லார்?

வந்தேறி வாழ்ந்திட, வாழ்ந்தவர் வீழ்வதோ?
தந்திரம் வென்றிடத் தமிழறம் தோற்பதோ?
வேற்றினம் தழைத்திடத் தமிழினம் தாழ்வதோ?
மாற்றார் ஆண்டிட மடமையில் நிலைப்பதோ?

உழைப்போர் பசித்திட உலுத்தர் கொழுப்பதோ?
உழவினைப் போற்றுவோர் வறுமையில் உழல்வதோ?
புல்லுருவி ஆணைக்குப் புலவரும் அடிமையோ?
வெல்போர் வீர்ரினம் வேருடன் மாய்ந்ததோ?

சாதிகுல்ப் பிறப்பும் ஆரியச் சதியே!
சனாதன தரும்மும் சதிகார்ர் நெறியே!
வேதாகம சாத்திர இதிகாச புராணங்கள்,
வைதிகர் விரித்த வஞ்சக வலைகளே!

உழைக்கப் பிறந்தார்க்குக் கைகளும் நான்கோ?
உண்ணப்பிறந்தார்க்கு இரைப்பையும் இரண்டோ?
பிறப்பினில் மாந்தர் உறுப்பால் ஒப்பெனில்,
இயற்கையில் அமையா வேற்றுமை எதற்கோ?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென’
அறம் உரைத்த சொல்லும் பொய்த்ததோ?
‘குலம் ஒன்றே மாந்தர் எல்லா’ மெனும்
மூலர் மொழியும் வாய்மை இழந்ததோ?

அன்பும் அறிவும் ஆற்றலும் உழைப்பும்
அறமும் பண்பும் நட்பும் மதிப்போர்,
ஒழுக்கம் போற்றி விழுப்பங் காண்போர்
இழுக்குடைச் சாதி ஏற்றலும் முறையோ?

தமிழன் பிறப்பினில் எவர்க்குந் தாழான்,
தமிழன் எவரையும் தாழ்த்தான் என்பது
தமிழன் வாழ்வினில் பழங்கதை ஆனதோ?
தமிழன் வாழ்வும் பழங்கதை தானோ?

சாதிப் பிரிவினில் கனலை மூட்டுவோம்!
சமய வேற்றுமை மாய்ந்திடச் செய்வோம்!
தீண்டாமைக் கேட்டினைக் களைந்து எறிவோம்!
வேண்டாத ஆரிய மாயையை எரிப்போம்!

மனிதனை மனிதன் மதித்து நடந்திட
மாண்புறு அறிவினைப் போற்றி ஒழுகிடப்
பகுத்தறிவு நெறியதனைத் தெளிந்த பெரியார்
பரப்பினர் நாளும் தன்மான உணர்வினை!

செந்நாய் குரைப்பின் சிங்கமும் நடுங்குமோ?
சிறுநரி ஊளையும் சிறுத்தையின் குகையிலோ?
வெஞ்சமர் அஞ்சிடா மரபினில் வந்தோர்
வஞ்சகர் மொழியினில் மயங்கி வீழ்வதோ?

அறிவினில் வயதில் தொண்டில் முதியர்
வாய்மைப் போருக்கு என்றும் இளைஞர்
பொய்ம்மைப் புரட்டினைப் பிட்டு஑் காட்டியே
மெய்ம்மை இதுவென விளக்கினா ரன்றோ?

ஈரோடு ஈன்ற தமிழினத் தந்தை!
போராடும் இயல்பினில் பூரித்த வேங்கை!
அறிவன அறிந்த அஞ்சா நெஞ்சினார்!
விழி, எழு, நடவென முழங்கின ரன்றோ!

விழித்தனம் நாமே! எழுந்தனர் நம்மவர்!
எழுந்தது தமிழகம்! நிமிர்ந்தனர் தமிழர்!
தழைத்தது தன்மானம்! கிளைத்தது மொழிப்பற்று!
செழித்தது பகுத்தறிவு, தொடர்ந்தது அறிவுப்போர்!

தொடித்தண் டூன்றிய தொண்டுப் பழமாம்
வெண்தாடி வேந்தர் தொடுத்த அறப்போர்
தொடரட்டும் தொடரட்டும் தமிழ்த்திருநாட்டில்
படரட்டும், பரவட்டும் பகுத்தறிவுப் பேரொளி!