பெண்ண்டிமை நிலை மாறவும், கலப்புத் திருமணமும் – விதவை மணமும் ஏற்கப்படவும் அவர் ஆற்றிய தொண்டு பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகோலின.

உழைப்பவர்கள் உருக்குலையவும் வறுமையில் வாடவும், உழைக்கதவர்கள் உண்டு கொழுத்து ஆதிக்கம் செலுத்தவுமான நிலையை எதிர்ப்பதற்கான மனத்துணிவை மக்களிடம் தந்தை பெரியார் உருவாக்கினார்.


பொதுவாகக் கூறின் – இன்றைய சமுதாய அமைப்பே ஒரு நீதி, நியாயமற்ற அடிப்படையில் அமைந்துள்ளதால், அதன் மூலமே , அறிவையும், உழைப்பையும் மதித்து வாழும் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தெளிந்து அதற்குக் கால்கோள் நடத்தினார் பெரியார்.

எண்ணங்களில் புரட்சியும், செயலில், முயற்சியில் நம்பிக்கையும் ஏற்படச்செய்து, அதன்மூலம் இந்தச் சமுதாய அமைப்பிலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்கவைத்திடப் பாடுபட்டார் பெரியார்.

ஆம், சமுதாயத்தின் எண்ணமெனும் நீரோட்டத்தை எதிர்த்துத் தமது வல்லமை மிகுந்த அறிவுத் துணை கொண்டு எதிர்நீச்சல் போட்டவர் பெரியார், தமது ஓய்வற்ற உழைப்பாலும், உறங்காத அறிவாலும், தோல்வி அறியாத மனத்தாலும், ஒரு புதிய சமுதாயத்திற்கான சிந்தைன் அடித்தளத்தை அமைப்பதில் வெற்றிக் கண்டவர் பெரியார்.

தந்தை பெரியாரின் எண்ணமும் – கருத்தும், ஏதேனும் ஒருவகையில் மாற்றம் செய்திடாத மனிதனே தமிழகத்தில் இல்லை. இன்று வாழ்பவர் எல்லோருமே – தமது எண்ணப்போக்கில், ஏற்றுள்ள கருத்துகளில் சிறிய அளவிலேனும் அவருக்குக் கடமைப்பட்டவர்களாகவே இருப்பர் என்பதில் ஐயமில்லை.

வாழ்க பெரியார் வளர்த்த சிந்தனை!
வெல்க சுயமரியாதை!