தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். எனவே ஓர் உலகமறிந்த நாத்திகராகத் திகழ்ந்தார். ஆனால், பெரியார் அவர்கள் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி. எப்போதும் மக்களின் நலனைப்பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட்டவர். அந்த உண்மையைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

உலகின் தலைசிறந்த தத்துவஞானி பெர்ட்ராண்ட் ரஸல் ஆவார். அவருக்கு இணையான தத்துவ மேதை பெரியார்.

மொழிபற்றிப் பெரியாரின் சிந்தனைகள் என்றும் பாராட்டப்பட்டும்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்”

என்பார் பாவேந்தர் பாரதிதாசன்.

அப்படிப்பட்ட அமுத்த் தமிழ்மொழிப் பெரியார் மொழிப்பற்று இராதாரிடமிருந்து தேசபக்தி இராது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாக்க்கொண்டு இயங்குவது. ஆதலால், தமிழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. பெரியார் அவர்கள் தாய்மொழியாம் தமிழ்மொழிமீது கொண்டிருந்த ஈடுபாட்டை இதன் மூலம் நாம் உணரலாம்.

சுதந்தரம் பெற்றபின் இந்தியாவில் மொழி பிரச்சினை பெரிதாக தலைதூக்கிற்று. இந்தி மொழியை அனைவரும் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தி வேண்டாம்; இன்பத் தமிழே எமக்குப் போதும் என்று ஆர்த்தெழுந்தார் பெரியார். அதற்காக அவர் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினார்.

மத்திய அரசுக்குச் சொந்தமான புகைவண்டி நிலையங்களில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்படுவது வழக்கம். பெரியார் அவர்கள் தார்பூசிப் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்தார்.

பெரியாரின் தொண்டர்கள் எல்லோரும் இந்தி ஒழிப்புப் போராட்டத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள்.

“நமது நாட்டில் இந்திப் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல்தான் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை” என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கான காரணத்தையும் அவரே தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பெரியார் கைது செய்யப்பட்டார். சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார். சிறையில் வயிற்றுவலியால் பெரும் துன்பத்திற்கு ஆளானார்.

ஒன்றல்ல. இரண்டல்ல நூற்றி அறுபத்தி ஏழு நாட்கள் பெரியார் சிறையில் வாடினார். உடல் மெலிந்தார். இந்தி மொழிபற்றிய சரியான நடவடிக்கை எடுக்கப்படாமலே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை அதிகம் கற்றவர் அல்லர் பெரியார். அவரது பேச்சும் சரி, எழுத்தும் சரி இலக்கண நடையில் அமைந்திராது. பாமரத் தமிழில்தான் பேசுவார். ஆனால், அது பயனுடைய – பொருள் நிறைந்த பேச்சாக இருக்கும். பாமரத் தமிழில்தான் எழுதுவார். ஆனால் அது பார் ஆளுவோரையும், பண்டிதர்களையும்கூட சிந்திக்கத் தூண்டிவிடும்.

தமிழ் மொழி அறிஞர்களே வியக்கும்வண்ணம் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வரவேற்கப்பட்டது. தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இதை அதிகம் என நினைத்தார் பெரியார். எனவே, அவர் எழுத்துகளின் எண்ணிக்கையை கூடியவரை குறைக்க எண்ணினார். ஆனாலும் தமிழ்மொழி அறிஞர்கள் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தனர் என்றாலும் பெரியார் வகுத்துக்காட்டிய எழுத்துச் சீர்திருத்தம் இன்று முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

அவனை அழைத்துவா என்ற வாக்கியத்தை பார்ப்போம். ‘ ‘ முன் உள்ள வடிவம் தற்போது ‘னை’ இவ்வாறு எழுதப்படுகிறது. இது அச்சுக் கோர்க்கவும் வசதியாக இருக்கும். அதுபோல ஓடுனான் என்பதை இப்போது ஓடினான் என்று எழுத்ப பழகிவிட்டோம். மொழியியல் மேதைகளேகூட இவ்வாறு சிந்தித்து செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிந்தனையாளர் பெரியார், செய்தமிழ் செம்மொழிக்கு செழுமை சேர்த்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, அவர் காலத்தில் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்கப்பட்டிருக்கிறது என்பதும் வரலாற்று உண்மை.

பெண் விடுதலைக்காகப் பெரிதும் பாடுபட்டவர் பெரியார். இந்தியத் திருநாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் பெண்களை அடிமையாகவே நடத்தி வந்தனர் அந்தக் காலத்தில்.

இந்திய விடுதலைப் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் வலுப்பெற்றது. அதே கால கட்டத்தில் சமூக சிந்தனையாளர்களின் சீர்திருத்தங்களும் மெல்ல மெல்ல பரவலாயிற்று.

வட இந்தியாவில் ‘சதி’ அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற கொடூரம் நடைமுறையில் இருந்தது. அதாவது கணவன் இறந்துவிட்டால், உயிரோடு இருக்கும் மனைவியையும் உடன் சிதையில் வைத்துக் கொளுத்திவிடுவார்கள். கொடுமையில் குமுறி எழுந்தார் சமூக சீர்துருத்தவாதி இராஜாராம் மோகன்ராய். “பிரம்ம சமாஜம்” என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நாட்டில் நிலவிய மூடநம்பிக்கைகளுக்கு முடிவு கட்டியவர். இராஜாராம் மோகன்ராய் இல்லத்தில் ஓர் ஆண்மகன் இறந்துவிட்டான். உடனே அவர் மனைவியையும் கொல்லத் துடித்தனர். அப்பொழுது சீறி எழுந்தார் இராஜாராம் மோகன்ராய். அன்றே இந்தக் கண்மூடித்தனமான செயலுக்கு முடிவு கட்டினார். பின்னர் உடன்கட்டை ஏறுதல் சட்ட விரோதமான செயல் என்று அரசாங்கத்தாரால் அறிவிக்கப்பட்டது. ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

பெரியார் தமிழகத்து இராஜாராம். பெண்கள் சுதந்தரமாக வாழ வேண்டும் எனப் பெரியார் விரும்பினார். ஆணுக்குப் பெண் அடிமை என்றிருந்த நிலை மாற வேண்டும் எனப் பாடுபட்டார்.

கணவன் இறந்தால் அவன் மனைவி விதவை என்று ஒதுக்கி வைக்கப்படுகிறாள். வெள்ளைச் சேலை உடுத்த வேண்டும். வெண்ணீறு அணிய வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றெல்லாம் எனப் பெரியார் பிரசாரம் செய்தார்.

மனைவி இறந்தால் மட்டும் அந்தக் கணவன் மறுமணம் செய்துகொள்கிறான். இது என்ன நியாயம்?

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? கேட்டார் பெரியார். சமநீதி வேண்டுமென அவர் சமர் புரிந்தார்.

பெரியார் சீர்திருத்தங்களைச் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை. அவற்றை செயல்படுத்தித் தானே முன்மாதிரியாக இருப்பார். அதனால்தான் பெரியார் தோன்றி 125 ஆண்டுகள் கடந்த பின்பும் நாம் அவரைப் போற்றி மகிழ்கிறோம்.

பெரியாரின் ஒரு தங்கை, திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு பையனும், பெண்ணும் உண்டு. தங்கை இளம் வயதிலேயே இறந்து விட்டார். பெண் குழந்தையின் பெயர் அம்மாயி. அம்மாயிக்கு பத்து வயதில் திருமணம் நடைபெற்றது. கணவனின் வயது 13 ஆகும். திருமணம் ஆன அறுபதாவதுநாள் கடுமையான வயிற்றுப் போக்கினால் கணவர் இறந்துவிட்டான்.

அம்மாயி விதவையானாள். பத்து வயதில் விதவையானாள். அம்மாயி கலங்கினாள். கதறி அழுதாள். தனது அவளநிலையைப் பெரியாரிடம் கூறி விம்பி அழுதாள்.

பெரியார் ஆழமாக சிந்தித்தார். அமைதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

அம்மாயிக்கு மறுமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.

பெற்றவர்களும் உறவினர்களும் எதிர்த்தனர். எதிர்ப்புகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை பெரியார். அம்மாயி தக்க பருவம் அடைந்ததும் பெரியாரே முன்னின்று அவளின் திருமணத்தை நடத்தி வைத்தார். சீர்திருத்தக்காரர் பெரியாரின் சீரிய செயலை சான்றோர்கள் பாராட்டினார்கள்.

விதவைத் திருமணம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

இதுமட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பெரியார் பல அரிய கருத்துகளை வழங்கியுள்ளார். அதனாலேயே அவர் பெண்களாலேயே ‘பெரியார்’ என்ற பட்டத்தையும் பெற்றார் என்பதையும் நாம் முன்னர் பார்த்தோம்.

பெண்களுக்கு சொத்துரிமை, சிவில் சட்ட உரிமைகள் அனைத்தும் வழங்கப்படவேண்டும் என வாதிட்டவர் பெரியார்.

ஆண்களுக்கு இணையாக கல்வி கற்கவும், தொழில் செய்யவும் பெண்களுக்கு உரிமை உண்டு என்று உலகம் அறியச் சொன்னவர் பெரியார்.

பெண் விடுதலை ஆண்களால் பெற்றுத்தர இயலாது. பெண்கள் தங்களைத் தாங்களே நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார் பெரியார்.

பெண்களுக்கு மதிப்புக் கொடுபதாகவும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? என்று கூறுவார் பெரியார்.

அதே சமயம் பெண்களுக்கு மிகவும் வேதனையான சில அறிவுரைகளையும் வழங்கினார்.

பெண்கள் சிக்கனமாக வாழவேண்டும். ஆடம்பரத்தை அறவே ஒழிக்க வேண்டும். பூக்களால் தலையலங்காரம் செய்தல் கூடாது. ஆடைகள் அணிவதிலும் பெண்கள் ஆண்களைப் போலவே உடுத்த வேண்டும் என்று புதிய சிந்தனையை முன் வைத்தார். அவர் தன் துணைவியார் நாகம்மையாரை அவரைப் போலவே ‘கைலி’ கட்டச் சொன்னார்.

பெண்கள் ஆண்களைப் போலவே பெயர் வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஆண், பெண் பேதம் ஒழியும் என்றார்.

பெண்கள் நீண்ட கூந்தல் வளர்த்துக்கொள்ளக் கூடாது. ஆண்களைப் போலவே ‘கிராப்’ வெட்டிக்கொள்ள வேண்டும் என்றார். அப்படி கிராப் வெட்டிக்கொள்ளும் பெண்களுக்கு 250 ரூபாய் பரிசு தருவதாகவும் அறிவித்தார் பெரியார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது தங்க நகைகளே. எனவே நகைகள் அணியக்கூடாது என்றார். பட்டுச்சேலை போன்ற பகட்டான துணிமணிகளை அணியக் கூடாது என்றார்.

ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலைக்குப் போகவேண்டும். குடும்பப் பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டையும் அன்றே வலியுறுத்தியவர் பெரியார்.

பெற்றோர்கள் 21 வயதுவரைப் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு தொழில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் பிறகு வாழ்க்கைத் துணையைப்பற்றி நினைக்க வேண்டும் என்பதெல்லாம் பெண்கள் முன்னேற்றம்பற்றியப் பெரியாரின் சிந்தனைகள் ஆகும்.

பெரியாரின் சிந்தனைகள் இன்று செயல் வடிவம் பெற்று வருகின்றன. பெண்களுக்கு முப்பது சதவீத இட ஒதுகீடு நாடெங்கும் அரசியல் தலைவர்களால் இன்று பேசப்படுகிறது. இந்த சிந்தனைக்கு அன்றே வித்திட்டவர் ‘வெண்தாடி வேந்தர்’ பெரியார்.