“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை, எல்லாரும் ஓர்விலை”

என்பது மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் ஆகும்.

மன்னுயிரையும் தன்னுயிர்போல் மதிக்க வேண்டும் என்பதையே பாரதியார் தமது பாடல் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மண்ணில் பிறந்த யாவரும் இந்தியர்களே. அனைவரும் ஒரு தாய்மக்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையைக் காத்து வாழவேண்டும் என்று தலைவர்கள் விரும்பினார்கள். அண்ணல் காந்தியடிகளும் அதனையே செயலாக்கிக் காட்டவிழைந்தார்.

இந்நிலையில் திருவாங்கூரில் ஒரு வேண்டத்தகாத நிகழ்ச்சி நடந்துவிட்டது. இன்றைய திருவனந்தபுரம்தான் அந்நாளில் திருவாங்கூர் என அழைக்கப்பட்டது. திருவாங்கூரில் மன்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வைக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. அழகான ஊர். ஆனால், ஊர் மக்களின் ஒரு சாரார் அருவெறுப்பான செயலில் ஈடுபட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் முக்கிய சாலை வழியே நடந்து செல்லக்கூடாது என்று அவர்கள் தடை விதித்தார்கள்.

தெருவில் நடப்பதற்குத் தடையா! கொதித்து எழுந்தனர் கொள்கைவாதிகள். மலையாள நாட்டைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்த அநாகரிகச் செயலை கண்டித்து மறியலில் ஈடுபட்டார்கள்.

ஜார்ஜ்ஜோசப், நீலகண்ட நம்பூதிரி ஆகியோர் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களையும் அவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அரசாங்கம் கைது செய்தது.

போராட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து போராட்டத்தை நடத்த பொறுப்பான தலைவர்கள் இல்லை. உரிமைக்கான போராட்டம் – அடிப்படை உரிமைக்கான போராட்டம் தோல்வியைத் தழுவிவிடுமோ என்று கைதான தலைவர்கள் கலக்கம் அடைந்தார்கள். எனவே சிறையிலிருந்தவாறே அவர்கள் இரகசியமாக தந்தை பெரியார் அவர்களுக்குத் தகவல் கொடுத்தார்கள்.

“தாங்கள் அவசியமு உடனே வைக்கம் புறப்பட்டு வரவேண்டும். போராட்டத்தை முன்நின்று நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களின் தன்மானம் காக்க வேண்டும்” என்று அவர்கள் தகவல் கொடுத்திருந்தார்கள்.

பெரியார் அப்போதுதான் மதுரை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரும்பியிருந்தார். தொடர்ந்து சொற்பொழிவுகள், விளக்கக் கூட்டங்கள் என அவர் ஓய்வின்றி பணியாற்றிக் கொண்டிருந்தார். கடுமையான வயிற்றுக்கடுப்பு. படுத்த படுக்கையாய் இருந்தார். மருத்துவர்கள் எங்கும் செல்லக்கூடாது. முழு ஓய்வு தேவை என்று கட்டளையிட்டிருந்தார்கள். அந்நிலையில் கேரளாவில் இருந்து அழைப்பு.

“குன்று பெயரினும் உள்ளூரம் தீரோம்
சிறையும் நோயும் கட்டிலும் தென்றலும்
செந்நீர் சிந்தல் தேன் சிந்து பாடல்”

என்று முழக்கமிடுவார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரியார் அவர்கள் தன் மனைவி நாகம்மையார் அவர்களிடம் உடல் நலம் குணமடைந்துவிட்டது என்று பொய் கூறினார். பெட்டி படுக்கையுடன் புறப்பட்டுவிட்டார் வைக்கம் நோக்கி!

பெரியாரும் மற்றவர்களும் உரிமைக்கான போராட்டத்தில் உற்சாகமாக ஈடுபட்டனர். பெரியார் வருகிறார் என்றவுடன் மலையாள மக்கள் ஆவலோடு கூடிவிட்டனர்.

திருவாங்கூர் மன்னர் பெரியாரைக் கைது செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டார். அதுமட்டுமல்ல அமைச்சர்களையும் மற்ற அதிகாரிகளையும் பெரியாரை ராஜ மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவும் பிறப்பித்திருந்தார்.

பெரியார் மன்னரின் இந்தச் செய்கையால் குழப்பம் அடைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் திகைத்தார்கள்.

திருவாங்கூர் மன்னர் தலைநகர் தில்லி செல்லும் போதெல்லாம், போகிற வழியில் ஈரோட்டில் தங்கி ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி மன்னர் ஓய்வு எடுக்கும் பங்களா ஈரோடு புகைவண்டி நிலையத்திற்கு அருகேயுள்ள ஓர் அழகான பங்களா. அந்தப் பங்களா பெரியார் குடும்பத்திற்குச் சொந்தமானதாகும். இடமும் அளித்து சுவையான உணவும் அளித்து சிறப்புச் செய்வார்கள். மன்னருடன் வந்திருப்பவர்கள் அருகேயுள்ள ஒரு சத்திரத்தில் தங்குவார்கள். அந்த சத்திரமும் பெரியார் குடும்பத்திற்குச் சொந்தமானதுதான். இந்த நட்பின் காரணமாகத்தான் மன்னர் பெரியாரை கைதுசெய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனைக் கேள்விப்பட்ட பெரியார் “நான் உங்கள் விருந்தாளியாக இங்கு வரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராட வந்துள்ளேன். எனவே நீங்கள் சட்டப்படி என்னைக் கைது செய்யவேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

வரவேற்க வந்த அதிகாரிகள் வாடிய முகத்துடன் திரும்பிவிட்டார்கள்.

பெரியார் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த கேரளாவுக்கு கிளம்பினார். உடன் தோழர்கள் ராமநாதன், அய்யாமுத்து ஆகியோரும் சென்றார்கள்.

நாகம்மையார் வைக்கம் சென்றார். மலையாள நாட்டுப் பெண்கள் பலரும் அவருடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தது.

நாகம்மையார், ராமநாதன், அய்யாமுத்து மற்றம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எல்லாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முப்பது நாட்களுக்குப் பிறகு பெரியாரும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். அதுமட்டுமல்ல பெரியார் உடனே திருவாங்கூர் நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் மன்னர் ஆணையிட்டார்.

மன்னரின் ஆணையை மீறினார் பெரியார். மீண்டும் பெரியார் சிறையில் வைக்கப்பட்டார். இப்போது அவருக்கு ஆறுமாத காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அஞ்சவில்லை அந்த சுயமரியாதைச் சிங்கம். மன்னர் நோய்வாய்பட்டு இறந்துபோனார். எனவே, பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. நான்கு மாத்ததில் விடுதலை ஆனார்.

நாகம்மையாரும் திருவாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தார். இறுதியில் சத்தியாகிரகம் வென்றது.

இந்தியாவில் முதன் முதலில் வெற்றிபெற்ற போராட்டம் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ தான் என்பது வரலாற்று உண்மை. அதனை நெஞ்சுறுதியோடு நிகழ்த்திக் காண்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

தந்தை பெரியார் அன்று முதல் ‘வைக்கம் வீரர்’ என வைர வரிகளால் அழைக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது போராட்டத்தால் வாழ்த்தப்பட்ட மக்களானார்கள்.

வரலாற்றையே கிடுகிடுக்கச் செய்தது வைக்கம் போராட்டம், ஆனால், தமிழ்நாட்டுத் தலைவர்கள் அதைப் பாராட்டவில்லை. மாறாகப் பெரியாரைக் குறை சொல்லி குற்றம் சாட்டினார்கள். ராஜாஜி அவர்கள் பெரியாருக்கு இது தேவையற்ற வேலை; தமிழ்நாட்டுக்காரரான இவருக்கு மலையாள நாட்டு விவகாரத்தில் ஏன் தலையிட வேண்டும் என்றுதான் கருத்துத் தெரிவித்தார்.

இந்தியத் திருநாட்டில் பிறந்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள தென்னாப்பிரிக்கா சென்றார் காந்தியடிகள். அங்கு அவர் நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். அது தென்னாப்பிரிக்க மக்களுக்காக நடைபெற்ற போராட்டம். அதுபோலத்தான் இதுவும். இன்னும் சொல்லப்போனால் இது பக்கத்து மாநிலத்தில் நிலவிய கொடுமை; அதற்காகத்தான் போராடினார் பெரியார். ‘வைக்கம் போராட்டம்’ பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் காந்தியடிகள்.

நடுநிலை தாளேடுகள்கூட பெரியாரின் ‘வைக்கம் போராட்டம்’ அதன் வெற்றிபற்றி விரிவாக செய்தி வெளியிடவில்லை.

சிந்தித்தார் பெரியார்.

பிராமணர் அல்லாதார் நலன்களை காக்க கட்டாயம் ஒரு நாளேடு அவசியம் என உணர்ந்தார். அப்போது தோன்றியுத்தான் ‘குடிஅரசு’. அது வார இதழாக வெளி வந்தது. இதழ் ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. ஞானியார் சுவாமிகளால் இதழ் வெளியிடப்பெற்றது.

வைக்கம் போராட்டத்தால் தமிழர்க்குக் கிடைத்த ஒரு புதையல் ‘குடிஅரசு’ இதழ் ஆகும்.