மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு வழி காட்டியான கொள்கைகளைக் கொண்டது; அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது; அது கால தேச வர்த்தமானப்படி மக்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது.

அரசினையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும், நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்குப் பொறாமையோ, துவேசமோ ஏற்பட்டதா லல்ல.

பார்ப்பனர்களுக் கென்று ஒரு மதம் இருக்கிறதனாலே அவர்கள் பார்ப்பனர்களாக, உயர்ந்த சாதிக்காரர்களாக இருக்கிறார்கள். அது போல நமக்கு என்று ஒரு மதம் இருந்தால் நாம் எப்படிச் சூத்திரர்களாக முடியும்? ஆகையினால் நமக்கு உண்மையிலேயே மதம் இல்லை. நமக்கு என்று ஒரு மதம் வேண்டுமானால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மதத்திற்கும் சாத்திரங்களுக்கும் கடவளை எசமான்னாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும் கடவுள் வேறு மதம் சாத்திரம் வேறு என்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் அறியாமையிலிருந்து தோன்றியதாகும். மதமும், சாத்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும், பயமுறுத்தி அடிமைகளாக்கவும் வேண்டும என்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப்பட்டவைகளாகும்.

இந்து மதம் என்பதாக எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு எந்த முறையும், எந்தத் திட்டமும் கிடையாது. பார்ப்பனர் சக்திக்கு ஏற்பப் பார்ப்பனரல்லாதவர்கள் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாக்கிக் கொள்ளும் திட்டங்களும், கருத்துக்களுமே யாகும்.

சாதிகள் ஒழிய வேண்டுமென்றால் இந்து மதம் அழிக்கப்பட வேண்டும். இந்து மதத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருக்கிற கடவுள்களையும் சாத்திரப் புராணங்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படியில்லாமல் வருணாசிரமம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு சாதிகள் ஒழிய வேண்டு மென்று யாராவது சொன்னால் ஒன்று அவர்கள் பித்தலாட்டக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது முட்டாள்களாக இருக்க வேண்டும்.

இந்து மதந்தான் சாதி மதப் பிரிவுகளை, வர்ணாச்சிரமத்தை வியுறுத்தி நிற்கச் செய்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்த சமுதாயத்தில் பல சாதி, பல கடவுள்கள் மலிந்து மக்களை மாக்களாக்கி விட்டது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்குமிருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்பட வேண்டும். இவைகள் ஒழிந்த பின்னரே சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும்.

மதக் கொடுமை

மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும், சயின்சுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் பார்க்கக் கூடாதென்றும், பகுத்தறிவு வேறு, மதக் கோட்டபாடுகள் வேறு என்றும், இந்தக் காலம் வேறு அந்தக் காலம் வேறு என்றும், பெரியோர்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள் தேடக்கூடாது என்றும், ரிசி மூலம், ந்தி மூலம் பார்க்கக் கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லிவிடுவதால் – உலகில் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின் மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றன.

கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம் மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது; கள், குடித்தவனைக் கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது.

ஓரிரு கோடி ரூபாய்ப் பணமும், ஓரிரு ஆயிரம் ஆண்களும் 5-6 மொழிகளில் பத்திர்கைகளும் வைத்துக் கொண்டு ஒரு ஈன முரிகத்துக்கும் நெய்வப் பிறவித்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம். எதிர்ப்பவரைத் தூக்கிலிடத்தக்க ஆதரவும் கிடைத்துவிடும். இதுதான் மதத்தின் லட்சணம்