சமூகப் புரட்சியாளர் தந்தைப் பெரியாரின் பிறந்த நாள், வீழ்ச்சியுற்ற தமிழரின் வாழ்வில் எழுச்சி பிறந்த நாள்!
‘இனமானமுள்ள தமிழன்’ பிற்பெடுத்த நாள்!
‘தன்மான முழக்கம் ஒலித்த நாள்!
‘பகுத்தறிவு ஒளி’ பரவிய நன்னாள்!
‘அடிமை மனப்பான்மை’ ஒழிந்திட்ட நாள்!
‘பிறமொழி திக்க எதிர்ப்பு’ முழங்கிய நாள்!
‘தீண்டாமை ஒழிப்பு’ உருக்கொண்ட நாள்!
‘பெண்ண்டிமை மறுப்பு’ அரும்பிய நாள்!
‘மூடநம்பிக்கைகள்’ முறியடிக்கப்பட்ட நாள்!
‘சமத்துவச் சமுதாய வாழ்வு’ அரும்பச்செய்த நாள்!
‘தமிழரின் எண்ணத்தில்’ ஏற்றம் கண்ட நாள்!
ஆம்! தமிழரின் வாழ்வில் வைதிகத்தின்
ஆதிக்கத்தினால் மண்டிக்கிடந்த, கெடுமதிகளை
அழித்தொழித்திடத் துவங்கிய நாள்!
‘தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின்
உரிமை வாழ்வுக்குக் கொடியுயர்த்திய திருநாள்!
ஆம்! உணர்விழந்து, உயிரிழந்து, செயலிழந்து
சீந்துவாரற்றுக் கிடந்த இனமக்கள், உரிமை
உணர்வு பெற வழிகண்ட நாள்!
ஒரு நூற்றாண்டுக்கால மாற்றத்திற்கு வித்திட்ட
ஒரு பேரியக்கமே பிறந்த நாள்!

மக்கள் எல்லோரும் எளிதில் ஏற்க்க்கூடிய விடுதலை இயக்கமான இந்தியக் தேசியக் காங்கிரசில் ஈடுபட்டுத் தொண்டாற்றி, முரசுகொட்டி, மறியல் நடத்திச் சிறைப்பட்டு வதைப்பட்ட காலத்திலேயே சமுதாயக் கேடுகளையும், காங்கிரசாரின் அதிகார வேட்கையையும் எண்ணிப் பார்த்து, அப்படிப்பட்டவர்களின் இயக்க வெற்றி, உயர்வகுப்பாரின் ஆதிக்க நிலையை நீடிக்குமேயன்றிப் பெரும்பான்மை இன மக்களுக்கு வாழ்வளிக்க வழி செய்யாது என்று உணர்ந்து, வேறு வழி காணவேண்டும் என்னும் முடிவுடனே காங்கிரசை விட்டு 1925 – ஆம் ஆண்டு வெளியேறினார் தந்தைப் பெரியார்!

எதிர்த்தவரே பின்னர் ஏற்றனர்!

தந்தைப் பெரியார் படித்து பட்டம் பெற்றவரல்லவராதலின், அறிஞர்களில் ஒருவராக மதிக்கப்படாத காலம். காங்கிரசுக் கடசியில் வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பெருந்தனக்கார்ர், உயர் வகுப்பார், பலராக இருந்தமையின் பெரியார் (ஈ.வெ.ரா) அவர்களின் இயற்கை அறிவாற்றலையோ, சிந்தனைத் திறனையோ, மதி நுட்பத்தையோ, மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எனினும், அவரது அயராத உழைப்பு, அஞ்சாமை, தியாக மனப்பான்மை, கொள்கை உறுதி ஆகியவற்றை உணர்ந்து மதித்து வந்தனர்.

பெரியாரின் சுய சிந்தனையில் பிறந்த எண்ணங்களையும், அவர் நாடிய சமுதாய மாற்றத்தையும் காங்கிரஸ் கட்சி அன்று ஏற்றிடும் நிலையில் இல்லை. ஏற்றிடுவதற்கு எண்ணிப் பார்த்திடும் நிலையிலும் இல்லை. அதன் விளைவுதான், நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் பொறுப்பில் நடைபெற்ற குருகுலத்தில் பயின்ற இளம் மாணவர்கட்கு – சாதி ஆச்சாரப்படி வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக உணவளித்து வந்த முறையை எதிர்த்துப் பெரியார் வாதாடியதாகும். பெரியாரின் சாதி வேற்றுமை எதிர்ப்பு உணர்வு, இளஞ்சிறாரிடையே வருணாசிரம்ம் நாட்டப்படுவதை எதிர்த்துப் போராடச் செய்த்து

கேரளத்தின் வைக்கத்தில் தீண்டாமை நிகழ்த்திய கோரத் தாண்டவத்தை எதிர்ப்பதிலும் போராடுவதிலும் அதே உணர்வுதான் அவரை உந்தியது.

அந்த நிகழ்ச்சிகளும், நாட்டு நடப்புகள்மு அவரது உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பி வந்தது. இந்த நாடே சுதந்திரம் பெற்றால்மு, வெள்ளையரே வெளியேறிவிட்டாலும், அந்தச் சுதந்திரம் எல்லா மக்களுக்கும் சுதந்திர வாழ்வு அளிக்குமா? மாறாக வருணாசிரம தரும்ப் பிடியில் சிக்குண்டு, ஆதிக்கச் சாதியினர் மற்ற மக்களை அடிமைப்படுத்திச் சுரண்டும் நிலையே நீடிக்குமா? என்பதே அந்தக் கேள்வி. அவர் கண்டறிந்த பதிலோ, அரசியல் சுதந்திரத்தால் மட்டும் எல்லோரும் உரிமை வாழ்வுபெறும் நிலை ஏற்படாது. சாதிமத ஆதிக்கம் ஒழிந்தால் தவிர – மக்கள் எல்லோரும் சுதந்திரமாக வாழும் நிலை பிறக்காது என்பதே.

தன்மான உணர்வு:

அந்தக் கருத்தை மெய்பிக்கும் சான்றாகவே, தந்தை பெரியாரின் வகுப்புரிமைப் பங்கீட்டுத் தீர்மானம் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் தோற்கடிக்கப்பட்டது. ஈ.வெ.ரா. அவர்கள் காங்கிரசை விட்டுத் தமது தோழர்களுடன் வெளியேற அது காரணமாயிற்று.

அன்று அவர் வெளியேறாதிருந்தால்? அந்தக் கருத்தும், கொள்கையும், துணிச்சலும் தோன்றாமலிருந்தால்? அப்படி ஒரு துணிச்சல் மிக்க மனிதர் ஒரு ஐம்பதாண்டுக்காலத் தமிழ்நாட்டு வரலாற்றில் இடம் பெறாமலிருந்தால்? என்ன கதிக்கு நாடும் நாமும் தள்ளப்பட்டிருப்போம் என்பதை எண்ணிப் பார்க்க நெஞ்சம் நடுங்குகின்றது.

செல்வாக்கும் புகழும், விளம்பரமும் பெற்றவர்களுடன் ஏற்பட்டிருந்த நட்பு, தொடர்பு, பழக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பொருட்படுத்தாமல் உதறிவிட்டு, ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கும் மதிப்பையும் புறக்கணித்துவிட்டுத் தன்னையே நம்பி, தன் முயற்சி, உழைப்பு இவற்றையே துணைகொண்டு, இலட்சிய வாதியின் பயணத்தில் வெற்றியும், தோல்வியும் ஒன்றே என்ற தெளிவுடன், விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல், தனித்து நின்றே தம் கொள்கையை வெளியிட முற்பட்டார். அவரது துணிச்சலில் பிறந்த சுயமரியாதை இயக்கத்தினால்தான் தமிழ்வானில் விடிவெள்ளி முளைத்தது.

இல்லையெனில், காங்கிரசுக் கட்சியினர் பரப்பிய சுதந்திர வேட்கை – வேறு எந்த மனித உரிமையையும், நியாய உணர்வையும் வெளிப்படுத்தவே இடமளிக்காமல் – மக்களிடையே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கை என்னும் இருளையே போர்வையாக்க்கொண்டு மக்களை உறக்கத்தில் ஆழ்த்தி இருக்கும்; மக்கள் விழிப்படைய வாய்ப்பே ஏற்பட்டிருக்காது; அப்படியே விழிப்புறினும் – உரிமை நாட்டும் உணர்வு வளர்ந்திருக்காது. தந்தை பெரியார் ஊட்டிய தன்மானப் பகுத்தறிவுக் கொள்கை விளக்கமே தமிழனை உறங்கவிடாமல் தடுத்துத் தனது உண்மை நிலையை உணரவைத்தது.

சொல்ல நினைத்ததைச் சொன்னார்!

பெரியார் முனைமழுங்காத இயற்கை அறிவைப் பயன்படுத்தும் சிந்தைனையாளராகவும், படிப்பறிவில் ஊறிச் சுய சிந்தனையை இழந்திடாதவராகவும், படித்தவர்கள், பண்டிதர்கள், பட்டதாரிகள் என்போர்தம் செல்வாக்கை எண்ணி அவர்தம் ஆதிக்கத்திற்குள் அகப்படாதவராகவும், தமக்கு ஏற்படக்கூடிய இழப்பு, அவமதிப்பு, பழி, அவமானம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதவராகவும், தமது இலட்சியத்தின் உயர்வை – பயனை – நல்விளைவைத் தம் வாழ்விலும் மேலாக மதிப்பவராகவும் இருந்ததாலேயே அந்தக்காலச் சூழ்நிலையிலும், அந்தப் பணியினை முழுமனத்துடன் அவர் மேற்கொண்டார்.

தமது அறிவுக்குச் சரி என்றும், நியாயம் என்றும், உண்மை என்றும் பட்டதைத் தமக்கு தெரிந்த முறையிலும், தாம் விளங்கிக்கொண்ட வகையிலும் ஊருக்கு உரைப்பதே தமது கடமை என்று தீர்மானித்துக்கொண்டார். அதை எல்லோரும் ஏற்பார்களா? என்று கவலைப்படவில்லை. சிலரே ஏற்பர், பலர் வெறுப்பர் என்பதும் அவர் அறிந்ததே!

தாம் சொல்லவேண்டியதைச் சொன்னால், கேட்பவர்களை அவரவர் அறிவிற்கேற்ப ஏற்றுக்கொள்வதை ஏற்கட்டும் என்னும் முடிவு கொண்டவராகவும் , முயற்சிப்போம் – முயற்சி வெற்றிபெரும் அளவுக்கு மகிழ்ச்சி – இல்லையேல் இழப்பது ஒன்றுமில்லை என்று தெளிந்த பகுத்தறிவாளராகவும் அவர் விளங்கினார்.

பகுத்தறிவால் மாற்றியவர்:

நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை – இன்னொரு வகைச் சமய நம்பிக்கையால், மதப்பற்றால் மாற்றியவர்களை சிலர் உண்டு என்தன்றி, மத நம்பிக்கை அடிப்படையில் வளர்ந்திட்ட சமுதாய வாழ்வை, பகுத்தறிவு அடிப்படையில் – மூட நம்பிக்கையின் சாயலின்றி மாற்றியமைத்தவர்களை இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

புத்தர் போன்று ஓரிருவர் பகுத்தறிவைப் பயன்படுத்திப் பல உண்மைகளை நிலைநாட்டினர் எனினும், அவர்தம் கொளைகையைப்பரப்பிடும் பணியும் சமய வடிவம் கொண்ட போது- சில நம்பிக்கைகளைக்கொண்டதாகவே நிலைப்பெற்றுள்ளத்தை அவர் அறிந்திருந்தார்.

ஆயினும் மத நம்பிக்கைகள் – நல்லறிவுக்கும் – தெளிவுக்கும் முட்டுக்கட்டை ஆவதை எண்ணி அவற்றை அடியுடன் நகர்த்திடும் நெறியில் தமது அறிவைப் பயன்படுத்தினார்.

இந்த முயற்சி – கா வெள்ளத்தால் ஏற்பட்ட பழமைப் பிடிப்பிலிருந்து, மனித உள்ளத்தை – அறிவின் துணைகொண்டு விடுவிப்பதாகும். அது எளிதன்று. பனிமலையில் ஏறுவது போன்றும் கடுமையான சோர்வினைத்தரும் அறிவுப் பணியாகும். எனினும், பெரியார் தம்மை அந்த எதிர்நீச்சல் பணிக்கே ஒப்படைத்துக்கொண்டார்.

அதன் இயல்பை அறிந்திருந்த காரணத்தாலேயே – அவர் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை. கண்டனம் கண்டு மயங்கவில்லை, தடைகள் கண்டு துவளவில்லை, பயன்குறைவு கண்டு வெகுளவில்லை.

கல்லாமையால் விளையும் இழப்பு பலவென்றாலும் அதனால் வாய்த்ததொரு தனிப்பெரும் நன்மை, பெரியாரின் இயற்கை மதி நுடபம், பயிற்சி முறைக் கல்வியால் மழுங்கிடும் நிலைக்கு ஆளாகாத்தும், த்த்தம் அறிவையும், அதன் தெளிவையும் நம்பாது, ஏட்டில் கற்றதை மட்டுமே நம்பி ஏற்று, அதை உரைப்பதிலேயே பெருமை தேடும் மனப்பான்மைக்கு அவர் ஆளாகாத்தும் ஆகும்.

ஆம்! கற்ற்றிந்த மேதைகள் எடுத்தியம்பவும், பரப்பவும் முன்வராத, முன்வரத் துணியாத கொள்கைகளுக்காக, வாதாடவும், போராடவும், பரப்பவும் பெரியார் முன்வந்தார். அதையும் பாமர மக்களுக்கு விளங்கும்படிப் பரப்ப முன் வந்தார். அதுவும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு வளையம் கட்டிய போதும் தொடர்ந்து அஞ்சாது பணிசெய்ய முன்வந்தார்.

எதிர்ப்பு- கண்டனம் – தாக்குதல் – கல்வீச்சு – செருப்பு வீச்சு – முதலியவற்றைச் சந்திப்பது அவருக்குப் பழக்கமாயிற்று. அதனால் மக்களின் அறியாமையே அவருக்குகப் புலனாயிற்று. அதுவே அவருக்கு, அவரது பகுத்தறிவுப் பணி எவ்வளுவு முக்கியமானது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி, அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. எதர்ப்பு – பால் பாயசம் பருகுவது போன்று அவரது ஆர்வத்தை வளர்த்தது.