சிந்தனையாளர்
சுயசிந்தனை என்பது என்ன? அது, “மனித வாழ்க்கைக்குப் பயன்படும் கொள்கைகள் – கோட்பாடுகள் ஆகியவற்றைத் தம்முடைய நடைமுறை உலகின் துய்ப்பறிவு கொண்டு சிந்தித்து வெளியிடுதல்” – என்று கூறலாம். உலகி பெரிய உண்மைகள் மிகச் சாதாரணமாகவே இருக்கின்றன. மிகச் சாதாரணமாகவே இருக்கின்ற அந்த உண்மைகள் யாவர் கண்ணிலும் படுவதில்லை. இதறகுக்காரணம் என்ன? மனிதன் உள்ளது உள்ளபடியே சிந்திப்பதில்லை. இதனைப் போன்றே பேசுவதும் இல்லை. எந்த மனிதனாக இருந்தாலும், சிந்தனையின் மற்றொரு கூறான கற்பனையைக் கலந்தே சிந்திக்கின்றான். அல்லது பேறுகின்றான். இதனால் உண்மைகளை உள்ளது உள்ளபடி சிந்திக்கும் திறத்தை மனிதன் இழந்து விடுகின்றான்.மிகச் சாதாரணமாக உள்ளவைகளும் கற்பனையைக் கலந்து சிந்திக்கும்போதும் பேசும் பதும் கவர்ச்சி உடையதாக ஆகிவிடுகின்றது.
இந்தக் கவர்ச்சியில்-வாழும் மனிதன் ஒரு காலமும் முன்னேற முடியாது. நம்நாடு பன்னெடுங்காலமாக்க் கற்பனை கலந்த சிந்தனையில் காலந்தள்ளி வருகின்றது. அதனால் நல்ல வாழவை இழந்து தடுமாறி நிற்கின்றது.
பெரியார் சிந்தனையல் பல உண்மைகள் தோன்றின. அவர் சிந்தனைகளில் துளியும் கற்பனை இல்லை. எந்த ஒன்றையும் அவர் உள்ளது உள்ளபடியே சிந்தித்தார். உள்ளது உள்ளப்டியே வெளியிட்டார். அவர் வாழ்நாளில், வெளியிட்ட சிந்தனைகள் முழுவதும் அவருடைய நேரிடையான அணுகுமுறைகளின் விளைவுகளே என்றுநாம் திடமாக எண்ணலாம். இன்னவர் சொன்னார். இன்னவர் எழுதினார். அவற்றைக்கொண்டு யான் சொல்லுகின்றேன் என்பதாக ஒரு சிந்தனையும் பெரியாரிடத்தில் இல்லை.
1. உள்ளது உள்ளபடிய சிந்தித்தல்.
2. நேர்முகமாகத் தானே ஈடுபாடு கொண்டு , அதன் வாயிலாகச் சிந்தித்தல்.
3. எந்த வகையான பற்று-பாசம் இவைகட்கு ஆட்படாமல் சிந்தனையின் முடிவுகளை வெளியிடுதல்.
இந்த மூன்றுமே பெரியார் என்று கூறிவிடலாம். இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு அவருடைய சிந்தனைத் தொகுதிகள் அமைந்துள்ள பாங்கை நாம் காணலாம்.
பெரியாருடைய சிந்தனை பற்றிக் குன்றக்டி அடிகளால் பின்வருமாறு எழுதுகின்றார்:-
“தமிழக வரலாற்றில் இத்தைகய மனிதர் தோன்றுதல் அரிது. நம்முடைய இலக்கிய கர்த்தாக்கள் சுயசிந்தனையை நம்ப முடியாவண்ணன், “முன்னோர் சொல்லைப் பொன்னேபோல் போற்றுவோம்” என்ற முதுரையை மூளையில் ஏற்றிச் சிந்திக்கும் திறனை-சிந்திக்கும மனப்பான்மையை அழித்து விட்டனர். ஆனால் பெரியார் தப்பிப் பிறந்தவர். அவர் சிந்திக்கிறார். தாம் சிந்தித்ததையே சொல்லுகின்றார்.அவ்வழியில் செயல்படுகின்றார்.
பெரியார் பற்றிய அடிகளாரின் இந்தக் கணிப்பு மிகவும் உண்மையொடுபட்டது.
பெரியாரின் இந்தப் பாங்கை மனித இனம் இழந்ததால்தான் உலகில் எலாம் இருந்தும், பல்வேறு வகையான துன்பங்களும், இன்னல்களுக்கும் ஆளாகியவே அழிகின்றனர். கண்டிருந்தும் குருடராய்,கால்கள் இருந்தம் நடமாட இயலாதவராய் மனித இனம் தடுமாறுகின்றது. உணைமையொடு படாத கற்பனைகள் – நம்பிக்கைகள் உண்மைச் சிந்தனையின் போலிக் கூறுகள். கடவுள்-மதம் – சாத்திரம்-மோட்சம்- நரகம் எலாம் போலிச் சிந்தனையின் விளைவுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் போலி சிந்தனைகட்கு ஆட்பட்டு மனித இனம் அலற்பட்டு அலைக்கழிகின்ற அவலநிலை பெரியார் வழியில் சிந்திக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்கு புலனாகும்.
உயிரனங்கள் எல்லாவற்றுக்குமே அறிவுண்டு. எதனையும் பகுத்து ஆய்ந்து சிந்தித்து அறியும் அறிவு உயிரினங்கள் பலவற்றுக்கு இல்லை. அவைகளுக்கு அமைந்த அறிவு இரை தேடுவது-இனப்பெருக்கம் செய்வது- எதிரிகளிடமிருந்து தப்புவது – என்ற எல்லைக் கோட்டில் வரையறைப்பட்ட நிலையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளா இருக்கின்றது.
இந்த எல்லைக் கோட்டினின்றும் இம்மியமு அவைகளாக தாண்டிச் சிந்திக முடியவில்லை. இதன் விளைவு என்ன? உயிரனங்களில் மனிதனுக்கு முன்னர்த தோன்றிய உயிரினங்கள் பல.
சிந்தித்துப் பகுத்தறியும் ஆற்றலால் மனிதன் மட்டும் வாழ்வில் மற்ற உயிரினங்களைவிடப் பல வழியிலும் முன்னேறிவிட்டான். மனிதன்தான் வகைவகையான உணவுகளைச் சமைத்து உண்ணுகின்றான். வகைவகையான கண்ணைக் கவரும் ஆடைகள் அணிகலன்கள் இவைகளை அணிந்து கொள்ளுகின்றான். மனிதன் காலந்தோறும் அமைத்துக்கடுயிருந்த வீடுகளில் எவ்வளவு முன்னேற்றம்? இயற்கையின் ஆற்றலை தனக்கு நன்மை பயக்கும் வகையில் ஆக்கிக் கொண்டான். மனிதரிலும், பகுத்தறிவை நன்குபயன்படுத்திச் சிந்தித்தவர்கள் முன்னேறினார்கள். சிந்தனைத்திறம் சிறிதும் இன்றி பகுத்தறிவை இழந்த மக்கள் அலது பயன்படுத்த மறந்த மக்கள் மறைய உயிரினங்களைப் போலின்னும் சீர்கெட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் அறிவென்று சொல்லுகின்ற எதுவும் ஆய்வுக்கு நிற்கவேண்டும். இரண்டாவதாக பயனுடையதாக இருக்க வேண்டும. ஆய்வுக்கு நிற்காத பயன் விளைக்காத எதுவும் அறிவாகாது. உழுதல் எனபது தொழில் பற்றிய அறிவு. இதனைச் சிறிது முயன்றால் யாரும் கற்றுக் கொள்ளலாம். உழுதால் பயிர் செய்யலாம். செய்த பயிரால் தானியங்களை விளைவிக்கலாம். விளைவித்த தானியங்களை உண்டு பசியாறலாம். உடல் வன்மை பெறலாம். தொழில் பற்றிய இந்த அறிவை எல்லோரும் பெறலாம். பயனையும் எல்லோரும் அடையலாம். ஆகவே இது அறிவாகிறது.
சம்பந்தர் போல நாமும் பாடலாம். அல்லது திருநாவுக்கரசர் போலவும் பாடலாம். ஆனால் கதவைச் சாவியில்லாமல் பாட்டைப்பாடித் திறக்கவும் முடியாது. இதனைப் போன்றே பூட்டிக் கொள்ளவும் செய்ய முடியாது. காரியமே நடவாதபோது பயனும் இல்லையாகின்றது. ஆகவே இது அறிவாகாது. இதனைப் போன்று கடவுள் மத நம்பிக்கையுடையவர்கள் சொல்லும் எதுவும் அறிவாகாது.
இனிப் பகுத்தறிவு என்ன என்பதைப் பெரியார் வழியில் சிந்திப்போம்.
“நாட்டில் மனிதச் சமுதாயத்தில் எத்தனை பேர் நம்புகிற காரியமானாலும், கருத்தானாலும், எத்தனை பேர் நடத்தி வருகிற காரியமானாலும், அவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், அவர்களுக்கு மதிப்புக்கொடுக்காமல் ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு கருத்தையும் தன் பகுத்தறிவுதனைக் கொண்டும் கண்கூடான துய்ப்பறிவைக் கொண்டும் சிந்தித்து, ஆராய்ந்து தெளிவு பெற்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆராய்வது எப்படி? இதனையும் பெரியார் வழியிலேயே காண்போம். ஆவதுபற்றிய பெரியார் கருத்து வருமாறு:-
“ஒரு விஷயத்தைத் த்த்துவ விசாரணை செய்ய முதலில் என்ன? ஏன்? எதற்காக? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறுவினாக்களைப் போட்டு திருப்தியான பதில் பெறவேண்டும்”
இதனால் பகுத்தறவு என்ன என்பது பற்றியும், அதனை எப்படி அடைவது என்பது பற்றியும், அய்யா அவர்கள் எழுதியுள்ளதைக் கண்டோம். பகுத்தறிவுக்குரிய விளக்கம் என்பது பெரியாரின் எழுத்தில், சட்ட அமைப்புபோல அமைந்துள்ளது. மேலும் தர்க்கமுறையிலும் (logical method) அமைந்துள்ள பாங்கை உற்றுக்கவனித்தால்நன்கு புலனாகும்.
எல்லோருக்கும் பகுத்தறிவு உண்டு. இதில் யாருக்கும் அய்யமில்லை. ஆனால், அந்தப் பகுத்தறிவை நல்ல வண்ணம் பயன்படுத்துவதில்லை. மக்கள் எல்லோரும் ஒருசேரப் பகுத்தறிவைப் பயன்படுத்த வொட்டாமல் தடைசெய்தவை இரண்டு என்பதை அறிந்து கொள்ளுகின்றோம். அந்த இரண்டுமாவன.
1. பலபேர் பலகாலமாக நம்புவதும்
2. பலபேர் பலகாலமாக செய்வதும் ஆகும்.
இந்த இரண்டும் பலபேர் பலகாமாக நம்பும் கருத்து என்றும் பலபேர் பலகாலமாக செய்யும் காரியம் என்றும் இரண்டு வகைப்படும். முதலில் சிந்தனை அளவில் நம்புவது. பிறகு செயலளவில் தொழிற்படுவது. இந்த முறையில்தான் மக்கள் வாழ்வின் செயன்முறைகள் இயலுகின்றன. முதற்கட்டம் சிந்தனை; இரண்டாவது கட்டம் செயல். இந்த சிந்தனையும் செயலுமல்லாது மக்கள் வாழ்வில் வேறு ஒன்றுமில்லை. இந்த இரண்டிலும் பகுத்தறிவைப பயன்படுத்துவது எப்படி? என்பதைப் பெரியார் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.
இதனை இன்னும் விரிவு செய்து காண்போம். பலபேர் பல காலமாக நம்புகின்றார்களே! அந்தக் கருத்தை நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? சிந்திக்கும்போதும்-என்ன? ஏன்? எப்படி? எப்போது? என்பன போன்ற வினாக்களை வினவி நாம் ஏன் விடைபெற வேண்டும்? ன்றுநினைத்துக் கொண்டு ஆட்டுமந்தை போலமக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆட்டுமந்தை ஒருவழியே போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆட்டுமந்தை ஒருவழியேபோய்க்கொண்டிருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அடுத்து பின்னே வருகின்ற ஆடு முன்னே சென்ற ஆடு எதனைக்கண்டு ஏன் தாண்டிச் சென்றது என்று சிந்திக்காது. உடனே அந்த இடம் வந்தத்தும் வழியிற் செல்லும் அவ்வளவு ஆடும் தாண்டியே செல்லும். ஏன் என்ற சிந்தித்துப் பார்க்கும் திறம் ஆட்டுக்கூட்டத்துக்கு இல்லை. மக்களில் இவ்வாறே உள்ளனர்; இவ்வளவு பேரும் இவ்வளவு காமாக உண்மையில்லாமலா நம்புவார்கள்? அல்லது செய்வார்களா? என்று கவைக்குதவாத கேள்வி ஒன்றைப் போட்டுவிட்டு அந்த வழியிலேயே தாமும் சென்றுவிடுவார்கள். கோடானுகோடி மக்கள் தவறும் இடம் இங்கேதான் உள்ளது. மக்களெல்லாம் தமது சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாத இடம் இவ்விடமேயாகும். பலபேர் நம்புகின்றார்கள், பலபேர் செய்கின்றார்கள் என்று எண்ணும்போது அதற்கு ஒருமதிப்பு வந்துவிடுகின்றது. பல காலமாக நம்புகிறார்கள். செய்கின்றார்கள் என்று செய்கின்றார்கள் என்று எண்ணும்போது இன்னும் மதிப்பு அதிமாய் விடுகின்றன. ஆட்கள் பலர் ஆக ஆக காலம் அதிகம் ஆக ஆக மூடக் கருத்துக்களும், மூடச்செயல்களும் மக்களிடையே மதிப்புப் பெறுவது மட்டுமல்ல-மக்கட்கு இயல்பாக அமைந்த பகுத்தறிவின் தொடங்கி விடுகின்ற அவல நிலையைக் காணுகின்றோம். இப்படித்தான் உலகில் கோடி கோடியாக மூடமக்கள் பெருகிக்கொண்டும் இருக்கின்றனர்.
ஆகவேதான்பெரியார் பலபேர் நம்புகின்ற காரியம், பலபேர் பலகாலமாக நடத்துகின்ற காரியம் என்ற நிலையில் இருந்துகொண்டு சிந்திக்காதே! மதிப்புக் கொடுக்காதே! என்று கோடிக்கணக்கான மக்கள் கண்ணை மூடிக்கொண்டு விழும் முனையில் நின்றுகொண்டு தடுத்துப் பகுத்தறிவோடு கூடிய பெருவாழ்வுக்கு வழிகாட்டுகின்றார்.
இந்த இடத்தில் பெரியார் சிந்தனையில் உள்ள சிறப்பு என்னவென்றால் ‘நான் சிந்தித்து விட்டேன், நீ அப்படியே, ஏற்றுக்கொள்’ என்று கூறவில்லை. உன்னுடைய அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் ஒத்துவருகின்றதா என்று சிந்தித்து ஆராய்ந்து பார். ஒத்து வருமானால் ஏற்றுக் கொள் என்று கூறுகின்றார். மனிதர் எல்லோருக்கும் சிந்தித்துத் தெளியும் ஆற்றல் இருக்கின்றது என்பதை நன்குணர்ந்து கூறுவது உலகில் இவரிடம் மட்டும் காணப்படும் புதுமையாகும். இப்படிச் சொல்லிச்சொல்லி எழுதி எழுதி- மக்கள் சிந்திக்கின்றார்களோ, ஆய்வு செய்கின்றார்களோ, இல்லையோ பெரியாருடைய பேச்சுக்களை அல்லது சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அல்லது ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தாவிட்டாலம், அல்லது ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தாவிட்டாலும் அவர் சுயசிந்தனையின் வெளியீடுகளான பேச்சுக்களைக் கேட்பது என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்ட புதுமையைக் கண்டோம்.
மக்களில் எத்தகையவரை உயர்ந்தவர் என்று போற்றுவது, அல்லது மக்களுக்கு வழிகாட்டிகளாக்க் கொள்ளுவது? என்பது பொருள் பொதிந்த சிந்தனையாகும். உலக நடைமுறைகளிலும் எவை எவைகளைக் கொண்டு மக்களை எல்லாரினும் வேறுபடுத்தி மதிக்கின்றோமோ அவைகளையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பெரியார் சிந்திக்கின்றார். இன்று உலகில் செல்வமுடையவர்களைத்தான் மதிக்கின்றார்கள். உலக நடைமுறைகள் நமக்கு இந்த உண்மையைப் பல கோணங்களில் அறிவித்துக்கொண்டிருக்கின்றன. குமரகுருபர சுவாமிகள்.
“செல்வம் என்பது சிந்தையின் நிறைவு
அல்கா நல்குரவு அவாஎனப் படுமே”
என்று பாடியிருந்தாலும் இக்கருத்து நன்றாக இருக்கின்றது என்று வேண்டுமானால் கூறுவார்கள். நடைமுறையில் இக்கருத்தினை விளக்கும் செயல்முறை படித்தவர்களிடமோ பாமரர்களிடமோ கண்டால் அரிதாகும்.
அறநூல்கள் செல்வமுடைமை அல்லது பொருளுடைமையை உடன்பாட்டு முகத்தாலும் எதிர்மறை முகத்தாலும் பலகோணங்களில் போற்றிப் பாராட்டியே கூறுகின்றன.
வள்ளுவர்,
‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லைப் பொருள்
என்று கூறுகின்றார். இதன் கருத்து இவர் ஒருமனிதர் என்று மதிக்கத்தகாதவர்களையும் மனிதர் என்று பொருளுடைமை மதிக்கச் செய்யும் எண்பதாகும். மேலும்,
‘செய்க! பொருளை’ …
என்று பொருள் தேடும் போட்டியில் மனிதனை முடுக்கி விடுகின்றார்.
பிறிதொருவர்,
‘கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லோரும் சென்றாங் கெதிர் கொள்வர் இல்லாணை என்று உடன்பாட்டிலும்,
“இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்,
செல்லா தனவன் வாயிற் சொல்.
என்று எதிர்மறையிலும் செல்வமுடைமையின் சிறப்பையும் செல்வமில்லாமையின் இழிவையும் பாடியுள்ளார்.
இந்தப் பாடல்களின் கருத்துக்களை அறம் அதாவது மேற்கொள்ளத் தக்கது என்று கருதியதனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக எதைச் செய்தாவது பணம் அல்லது பொருள் தேடவேண்டுமென்ற போட்டி உலகில் வலுத்துவிட்டது.
இக்கருத்து எவ்வறா அறமாகும்? அறம என்ற ல்லோரும் மேற்கொள்ளத்தக்க சிறந் நடைமுறைளை யல்லவா வற்புறுத்த வேண்டும்! தனியுடைமை உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள உண்மை இது. இந்த உண்மையை அப்படியே பாட்டாக பாடிவிட்டால் அறமாகுமா? சிந்திக்க வேண்டும்.
இந்தப் பணம் அல்லது பொருளுடைமைக்கு அடுத்த நிலையில் உலகம் மதிக்கத்தக்கதாக அமைவது படிப்புடைமை. அதனைப் பற்றியும் கல்வி என்ற தலைப்பில் விரிவாக அறநூல்கள் கூறுகின்றன. அடுத்து அறிவுடைமை வருகின்றது. அறிவுடைமையையும் அறநூல்கள் பெருமைப்படுத்தி விரிவாகப் பேசுகின்றன. அவைகளையெல்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இவையும் உலகில் கண்கூடாக நடந்து கொண்டிருக்கின்ற உண்மைகளே. இந்த உண்மைகளை அறநூல்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. இவ்வாறு நாம் எழதவாதால் செல்வமோ, கல்வியோ – அறிவோ மக்களுக்கு வேண்டியதில்லை என்பது கருத்தல்ல. நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது, உலகம் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக உள்ள மனிதன் யாவன்? மனித்த் தன்மை என்பது என்ன? என்பதே ஆகும்.
மேற்காட்டிய வண்ணம் நடைமுறை உலகமும் அறிஞர் உலகமும், பணமுடையவர்களையும், படிப்படுடையவர்களையும், அறிவுடையவர்களையும் உயர்த்தி எடுத்துக்காட்டான மனிதர்களாகக்
காட்டுகின்றன.
“பணத்தால் ஒருமனிதனை மதிப்பதென்றால் ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்கவேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைபிரேரியைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமென்றால் என்சைக்கிளோபீடியா -ரேடியா முதலியவைகளைத்தான் மதிக்க வேண்டும்.இப்படியாக அநேகவற்றை சீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதாலால் நாம் மனிதனை மதிப்பது, பேசுவு நினைவுறுவது என்பவை எல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல,”
இந்தச் சிந்தனையின் விளக்கத்தைப் பெரியார் வழியில் விளக்குவோம். உயிர் என்றாலே தன்னைப் பற்றிய உணர்ச்சி (self) உடையது என்பதுதான் கருத்து. அதாவது தன்னைப்பற்றிய தன் வாழ்வைப்பற்றிய, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றிய நினைவும், செயலும் உடையது என்பதுதான் கருத்து. அதாவது தன்னைப்பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றிய நினைவும், செயலும் உடையது என்பதுதான் கருத்து. உயிரின் இயல்பான இக்குணத்தின் அடிப்படையில் பணத்தைக் கொண்டும், படிப்பைக் கொண்டும், அறிவைக் கொண்டும் தன்னளவில் வாழ்பவள் எவ்வாறு மதிக்கத்தக்கவன் ஆவான்? செல்வம் ஒருவரிடம், இருக்கின்றது. அது அவருக்கே பயன்படுமானால் அவனைச் சமுதாயமும் உலகமும் மதிக்க வேண்டிய அவசியமென்ன? இக் கருத்தையே பெரியார் வேறு கோணத்தில் பின்வருமாறு விளக்குகின்றார்.
“ஓட்டல்காரன் அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர் குருநாதன் ஆவானா? தாசி காதலியாவாளா? என்பது போலத்தான் தன் தன் பிழைப்புக்காக்கக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் எப்படிப் பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமேயொழிய போற்றக்கூடியதாக ஆகாது.
மக்களின் பட்டினித்துன்பங்கண்டு எதிர்ப்பயன் ஒன்றையும் நோக்காமல் சோறு எவன் போடுகின்றானோ அவன் அன்னதானப் பிரபு ஆகலாம். பசிக்குச் சோற்றைப் போட்டாலும் அதற்காக்ககாசைப் பெற்றுக்கொள்ளும்போது, எதிர்ப்பயன் பெற்றதாக ஆகிவிடுகிறது. இந்த நிலையில் உணவுக்கடைக்காரன் உயிரியல்பாகிய தன்னை பேணி கொள்ளுதலாகிய செயல்படுதலை உடையவனாகவே இருக்கின்றான். மற்றவர்களையும் இப்படியே காண்க. இக்கருத்துக்கள் புலனாக விளக்கிய பெரியார் பின்வருமாறு வரைந்து உயர்ந்த மனிதனை – எடுத்துக்காட்டான மனிதனை -நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
“உயிரியல்பாகிய தன்னளவில் பயன்பட்டுக் கொள்ளுதல் இல்லாத தன்மை -செய்கை வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிக் கவலையில்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவர்கள் மதிக்கப்ட்டே தீருவார்கள்.”
அவனே உயர்ந்த மனிதன், மனிதரில் எடுத்துக்காட்டான மனிதன் என்று நாம் எண்ணவேண்டும்.
புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியின் பாடலாக வரும் பாட்டில்,
………”தனக்கென முயால நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையால்”
இந்தமக்கள் உலகம் உளவாயிருக்கின்றது. இல்லாவிட்டால் மேற்காட்டிய உயிரின் இயல்பாகிய தன்னைப் பேணிக்கொள்ளுதல் என்ற உணர்வால் உந்தப்பட்டுப் போட்டியாலும் பொறாமையாலும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு, மனித இனமே உலகில் இருக்காது. இந்த உயர்ந்த கோட்பாட்டு வாழ்க்கைதான் மனித உலகைக் காப்பாற்றுகிறது என அறிவுறுத்திய கருத்து பெரியார் கருத்தோடு ஒத்துச் செல்லுவதைக்காணலாம். வள்ளுவரும்,
“பண்புடையார் பட்டுண் டுலகம் அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.”
என்றும் கூறும் கருத்தும், யாம் எண்ணுதல் தகுமென அறிக.
தொண்டு இது மனித வாழ்வில் மதிக்கத்தக்க செயலைக் குறிக்கும் தொழிற்சொல். தொண்டர் என்பது அச்செயலையுடைய மதிக்கத்தக்க மனிதரைக் குறிக்கும் சொல். தொண்டு என்ற சொல்லால் குறிக்கப்படும் மதிக்கத்தக்க செயற்பாடுகள் யாவை? அந்தச் செயற்பாடுகளை உடைய தொண்டர் எத்தகையர்? என்று சிந்திப்போம்.
உலகியலில் இதுகாறும் நடந்துவந்த அல்லது வழிவழியாக நடந்துகொண்டிருக்கிற தன்மை என்ன? எல்லா மக்களும் போற்றிப் புகழத்தக்க செயல்கள் தொண்டு என்று குறிக்கப்படுகின்றன. அவ்வாறே போற்றிப் புகழத்தக்க செயல்களைச்செய்தோர் தொண்டர் என்று சிறப்பிக்கப்பட்டனர். பொதுவாகத்,
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
என்ற இவ்வடி அவ்வையார் பாடலில் பெரியதில் எல்லாம் பெரியதுத எது? என்ற வினாவிற்கு விடையாக வருகின்றது.
இப்பாடலில் தொண்டர் யார் என்பது விளக்கப் பெறவில்லை. என்றாலும் இறைவன் அடியவர்களையே தொண்டர் என்று குறித்தார் என அப்பாடல்ல் மேலே குறித்துள்ள செய்திகள் கொண்டு நாம் எண்ணலாம். ஆழ்வர் ஒருவர்,
“வண்பொன்னிப் பேராறுபோல் வருங்கண்ண நீர்கொண்டு அரங்கன் கோயில் முற்றம்சேறு செய்தொண்டர்
சேவடிணச் செஞ்சேறு என்சென்னிக் கணிவனே
என்று பாடியுள்ளார். திருவரங்கன்மீது கொண்ட பற்றினால் அரங்கநாதரின் கோயிலின் உள்ளே செல்லும் அடியவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது. அது காவிரியாற்று வெள்ளம்போலக்கண்களினின்றும் வழிந்து, கோயிலின் முற்றத்தை நனைக்கின்றது.
மேலும் தொடர்ந்து அடியவர் செல்லுவதால் முற்றம் சேறாகிறது. இறைவன் மீது கொண்ட பற்றினால், வந்த கண்ணீர் கொண்டு ஆன சேற்றை அணியாக என்னுடைய சென்னி மீது அணிந்து கொள்ளுவேன் எனபது பாடலின் கருத்து.
இங்கும் தொண்டர் என்னும் சொல், இறைவன் அடியவர்களையே சுட்டி வருகின்றமையை உணரலாம்.
தொண்டர் என்னும் சொல் அடுத்த நிலையில் அன்னிய ஆட்சியினின்றும் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று கருத்தில் பலதுன்பங்களுக்கு ஆளானவர்களைக் குறிக்கத் தொண்டர் என்றனர். காங்கிரசுத் தொண்டர் இவர்’ – என்று பேசக் கேட்டிருக்கின்றோம். தன்னலமற்ற செயலைத் தொண்டு என்றும், தன்னலமற்றவரைத் தொண்டர் என்றும் வழக்காற்றில் வங்கி வந்துள்ளமையை அறிகின்றோம். தன்னலத்தோடு செயல்படும் செயலைக் குறிக்கச்செயல் அல்லது தொழில் என்று குறிக்கின்றோம்.
திரு.வி.க. போன்றவர்கள் தொண்டு என்ற சொல்லுக்கு முனைப்பற்ற தன்மை என்று வரைந்துள்ளார். உள்ளம் முனைப்பற்று அடக்கமாகவுள்ளவர் தொண்டர் எனப்படுவார் என்றனர். தன்முனைப்பற்று மக்களெல்லாம் விரும்பிப் போற்றும் தெய்வத் தொடர்பான செய்லகளையும் நாட்டுத்தொடர்பான செயல்களையும் செய்தவரைத் தொண்டர் என்றும் குறித்து வந்தனர் என்பதை நாமறிகின்றோம்.
இந்த வழக்காறுகளையெல்லாம் நன்குணர்ந்த பெரியார் இச்சொல்லின் கருத்தைப்பின்வருமாறு விளக்கினார்.
“பொது மக்களிடம் நல்ல பெயரை வாங்க விரும்புவதைவிட, மக்களின் நன்மைக்கான காரியங்களைச் செய்வதே உண்மைத் தொண்டு” என்று கூறினார்.
மக்கள் சென்ற வழியே சென்று அவர்களிடம் நல்ல பெயரை வாங்க முனைந்தவர்களே நாட்டில் மிகுதியும் தொண்டர் எனப்பட்டனர். அப்படிபட்ட செயல்களையும் செய்தவர் உண்மைத் தொண்டர் அல்லர். அவர்கள் போலித் தொண்டர். உண்மைத் தொண்டர் எனப்படுவார் மக்கள் விரும்பாவிட்டாலும் இன்னும் சொல்லப்போனால் மக்கள் எதிர்த்தாலும் மக்களுக்கென நன்மைகள் யாவை எனத் தேர்ந்து அவ்வழியில் நின்று செயல்படுவோரே யாவர். இக்கருத்தைப்பெரியார் கூறிய இவ்விளக்கம் புலப்படுத்துகின்றது. வழிவழியாக வந்த கருத்தில் பெரியாரின் சுயசிந்தனையானது புதிய தலைகீழான மாற்றத்தைச்செய்துள்ளமையை இங்கு அறிகின்றோம்.
பக்தி-ஒழுக்கம் என்பன மக்கள் வாழ்க்கையில் மேற்கொண்டு அன்றாடம் நடத்திக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் என்று கூறலாம். வற்றுள் பக்தி என்பது இறைவன் மீது மனிதர கொள்ளும் பற்றின் முதிர்ச்சி என்று கூறலாம்.
இறைவன்மீது பற்றுக்கொள்ளுதல் என்பது பொறிபுலன்களுக்குப்புலனாகாமல் வரையறைக்கு உட்பட்டது.
அதன்மீது வரையறைப்படாமல் கொள்ளும் பற்றுக்கு பக்தி அதன்மீது என்ற வடசொல்லால் குறிக்கின்றோம். இவ்வாறு வரையறை இல்லாமல் வெறிகொண்ட பற்றைச் செய்வதென்பது தமிழர்கள் வாழ்வில் இல்லை. இடையே தமிழகத்தில் பக்தி இயக்கம் பரவியபோது இச்சொல்லும் வந்த சேர்ந்தது.
ஒழுக்கம் என்பது மனிதனின் இடையறாத செயன்முறைகளைக் குறிக்கும் என்று கருதலாம். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலும் ஏதாவதொரு செயலைகச் செய்துகொண்டேதான் இருப்பான். மனிதன் உறங்கினாலும் உறங்குதலைச் செய்கிறான் என்பதே பொருள். இவ்வாறு செயற்படுதலென்பது மனிதன் மனிதனின் செயற்பாடு அற்றநிலை என்று கூறலாம். ஒழுகுதல் என்ற சொல தண்ணீர் போன்று நீர்த்தன்மையுடைய பொருள்களின் செயலாக்க் குறிக்கும் தொழிற்சொல். நீர் ஒழுகிற்று. யாறு ஒழுகிற்று என்ற வழக்குண்டு. தண்ணீர் ஓடும்போது எவ்வாறு தொடர்ந்து இடையறவு படாது ஓடுகின்றதோ அதனைப்போன்றே மனிதனின் இடையறவு படாத செயல்முறைகளை முதலில் இச்சொல் குறித்துப் பின்னர்க்குறிப்பிட்ட நல்ல செயன்முறைகளைக் குறிக்கும் பெயராக வழக்கில் வந்திருக்கலாம்.
பக்தி-ஒழுக்கம் என்னும் இச்சொற்களால் குறிக்கப்படும் கருத்துக்ககள்நாட்டில் எந்திறத்து மக்களாலும் விரும்பி வரவேற்கப்படுவனவாகவுள்ளன. பக்தி ஒழுக்கம் என்ற இரண்டில் ஒழுக்கத்தைவிடப் பக்திக்கு இன்றியமையாமையை மக்களும் மன்னர்களும் கொடுத்து வந்துள்ளனர். ஒருவன் ஒழுக்கமுடையவனாயிருத்தல் என்பதைவிடப் பக்தியுடைவனாயிருத்தலுக்கு, அதிகப் பெருமையும் சிறப்பும் கொடுத்து மதச்சார்பான புராணங்கள் பேசுகின்றன. பெரிய புராணத்தில் எறிபத்த நாயனார், சண்டேசுவரநாயனார்போன்றவர்கள் பக்தி வெறிகொண்டு – ஒழுக்க நெறியக் கொஞ்சமும் எண்ணாதவர்கள். அடியவர் கொண்டுவந்த பூக்குடலையைப் பிடுங்கிச் சிந்திவிட்டது என்பதற்காக – அரசனுடைய பட்டத்த யானையையும் யானைப் பாகனையும் மழுவால் வெட்டிக் கொன்றவர் எறிபத்த நாயனார்.
சண்டேசுவர நாயனார் தந்தையின் தாளை வெட்டி வீழ்த்தியவர். திருவிளையாடல் புராணத்தில் மாபாதகந் தீர்த்த படலம் என்உ வருகின்றது. இப்படலத்தில் தாயைப் புணர்ந்து தந்தையை வெட்டிக் கொண்ற கொடுஞ்செயல் ஒரு பக்தனால் செய்யப்படுகின்றது. இவர்கள் எல்லோருக்கும் கடவுள் அருள் கிடைத்ததாகப் பெரிய புராணமும் திருவளையாடற புராணமும் கூறுகின்றன. பக்தி வெளி கொண்டு ஒழுக்கத்தை அறவே மறந்து திரிந்த அடியவர்களுக்கு முக்தி கொடுத்தாகவரும் தம சம்பந்தமான கதைகளைப் படிக்கும் நமக்குத் தற்கால மக்களாட்சியின் சீர்கேடுகள் நினைவிற்கு வருகின்றன.
நம் நாட்டு மக்களாட்சி முறையைப் பெரியார் “சனநாயகம் என்பது காலிகள் நாயகம் ” என்று கூறுவார். நாடெங்கிலும் உள்ள காலிகளும், எந்தெந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்தக்கட்சியைச சேர்ந்தவர்கள் என்று அது அதற்குரிய சின்னங்களை அணிந்துகொண்டு மனம்போன போக்கில் எதை வேண்டுமானாலும் செய்கின்றார்கள். அடுத்துவரும் தேர்தல்களில் வாக்குபெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகளும் அவைகளைச் சார்ந்த அமைச்சர்களும் அவர்களை மன்னித்துச்சலுகைகள் பலதந்து காப்பாற்றி விடுகின்றனர். இந்த நிகழ்ச்சிகளைப் போன்றே வரலாறு தெரியாக் காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும் அரசோச்சிய பல்லவ – பாண்டிய சோழ மன்னர்களின் ஆட்சியில் பக்தியின் பெயரால் ஒழுக்கத்தை மீறிக் கொடுஞ் செயலைச் செய்தவர்களுக்கெல்லாம், மன்னனின் பாராட்டும் கடவுள் அருளால் முக்தியும் கிடைத்ததாகப்புராணங்கள் கூறுகின்றன.
இவை கூட வியப்பில்லை. சைவ வைணவக் கடவுள்களான சிவனம்-திருமாலும் ஒழுக்கம் என்பதைச சிறிதும் மதியாத காலித்தனமான பல செயல்களைச்செய்த்தாக மத நூல்கள் கூறுகின்றன. ஆயர்பாடியில் கணனாகப் பிறந்த திருமால் செய்த செயல்களுக்கும் ஒழுக்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை. கண்ணன் செய்த காலித்தனமான செயல்களையெல்லாம் பகவான் செய்த லீலைகளாகப்பாகவதம் கூறுகின்றது. ஆழ்வார்கள் அவைகளைப் பாட்டுக்களாகப்பாடியுள்ளனர். பாகவதர்கள் அப்பாடல்களைப் பாடிப் பாடிப் பரவசம் அடைகின்றனர்.
சைவத் தொடர்பான கதைகளில் சிவபெருமான் தாருகாவனத்துக்குப்போய், அங்கு அடியவர்களாக வாழ்ந்து கொண்டிருந்த இருடிகளின் (ரிஷிகளின்) மனைவிமார்களின் கற்பைக் கெடுத்துவிட்டு வந்தார் என்பதைக் கடவுளின் பெருமையாகத் திருவிளையாடல் பேசுகின்றது. திருவாய்மொழி வியாக்கியானத்தில் ஒரு வடமொழித் தொடரைக் கூறுவார்கள். அது “ஏன ஏன தாதாகச்சதிதேன தேனசக கச்சதி” என்பதாகும். இதன் கருத்து தலைவன் எப்படியோ அப்படியே உலகமும் உள்ளது என்பதாகும். மத சம்பந்தமான கடவுள்களிடத்தும் ஒழுக்கமில்லை. அக்கடவுள்களைப் பின்பற்றும் மக்களிடத்தும் ஒழுக்கம் இல்லை.
இந்த நிலைமைகளையெல்லாம் சிந்தித்த பெரியார் பக்தி ஒழுக்கம் ஆகிய இரண்டையும் பற்றி புதிய விளக்கத்தைக்கூறியுள்ளார்கள். அவை வருமாறு:-
“கடவுளாகட்டும் – மதமாகட்டும் – பக்தியாகட்டும் – மோட்சமாகட்டும் வைத்துக்கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச்சொத்து, உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. உண்மை- நாணயம்-ஒழுக்கம் பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன். உங்களுக்கொன்றும் நஷ்டமில்லை பாருங்கள். எனக்கு பக்தி இல்லை என்பதனாலே உங்களுக்கு என்ன நஷ்டம்?
ஆனால் ஒழுக்கமில்லை என்றால் என்னவாகும் பாருங்கள். நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மையுணர்வு இல்லையென்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாத்து ன்னொருமனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப்பெயர்தானே!
ஒழுக்கமாக இல்லையென்றால் எங்கேயோ ஒழுக்கக்கேடாக நடந்து தொல்லை பண்ணிக்கொண்டிருக்கிறான். உண்மையாக இல்லை என்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றி பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக கொண்டிருக்கிஆன் என்றுதானே பொருள். ஆகவே ஒழுக்கம் நாணயம் உண்மை இவைகளை பொதுச் சொத்து.”
இதனால் அரசமைப்புக்களும் மக்களும் முனைப்பாகப் பக்தி நெறியில் ஈடுபடுவது தேவையில்லாத ஒன்று. ஆனால் உண்மை-நேர்மை-நேர்மை-நாணயம்-ஒழுக்கம் போன்றவை மனித சமுதாயத்தில் நிலைபெற-முனைப்போடு செயல்பட வேண்டுமென்பது தெளிவாகப் புரிகின்றது. இவ்வாறே பெரியாருடைய சிந்தனைகள் எல்லாத் துறையிலும் புதுநெறி கண்டு புரட்சியை விளைவிபன என்பதை நாமுணர வேண்டும். பெரியார் காணும் அந்தப் புரட்சியான சிந்தனைகளின் விளைவு மனித இனத்தில் மிக்க நன்மை பயப்பனவாகவே அமைந்துள்ள பாங்கை யாரும் நன்குணர வேண்டும்.
கடவுள் மதம் பக்தி ஆகிய நெறிகளில் ஈடுபட்டால் ஒழுக்கம், உண்மை, நாணயம் ஆகிய மனிதசமுதாயத்துக்கு வேண்டிய நெறிகள் அல்லது நடைமுறைகள செழிக்கும் என்று வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மன்னர்களும் மக்களும் நம்பினர். வரலாற்றுக் காலப் பல்லவர்,பாண்டியர், சோழர் ஆகிய மன்னர்களும் மக்களும் நம்பினர். உண்மை- நாணயம்-ஒழுக்கம்-நேர்மையாகிய உயர்பண்புகள் பக்தி நெறியோடு கலந்து கிடப்பனவாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றனர. அதனால்தான் பக்திமான்களுக்கு நாட்டில் பொதுவாகச் செல்வாக்கு வளர்ந்தது.
ஆனால் பெரியார் பக்தி நெறிக்கும் ஒழுக்க நெறிக்கும் உள்ள வேறுபாட்டை மிக நுணுக்கமாச் சிந்தித்து வெளியிட்டுள்ளார். ஒருவன் பக்தி உடையவன் ஆனால் அதனால் விளையும் நன்மைக்கூறுகள் அவனைத்தான் வந்தடையும்.
அதனைப்போன்றே பக்தி இல்லாமல் ஒருவன் துன்பமடைகின்றான் என்றால் அந்தத் துன்பம் அவனைத்தான் பாதிக்கும். ஆகவே கடவுள் மத பக்தி மோட்சம் என்று சொல்லப்படுவன தனிப்பட்ட மனிதர்களைப்பாதிக்கும் இயல்புகளுடையவை. உண்மை-நாணயம்-நேர்மை போன்றவை மனித சமுதாயத்தின் பொதுச்சொத்து. எப்படி? ஒரு மனிதன் ஒழுக்கமில்லாதவன் உண்மையில்லாதன் என்றால் அவன் நடவடிக்கைகளின் விளைவு அவனளவில் நில்லாது, மற்றவரையும் பாதிக்கின்றது. மற்றவர்க்குச்செய்யும் தீமைகளே உண்மையின்மை-நேர்மையின்மை-ஒழுக்கமின்மை என்னும் பெயர் பெறுகின்றன. ஆகவே ஆட்சியிலுள்ளோரும் மக்களும் மிக்க கவலைகொண்டு பேணிக்காக்க வேண்டியவை உண்மை-நாணயம்-ஒழுக்கம் ஆகிய உயர் பண்புகள் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டுவந்த இந்நாட்ட அரசமைப்புக்களும், இவ்வாறு சிந்திக்கவில்லை, மக்களும் சிந்திக்கவில்லை. இப்போது அமைந்துள மக்களாட்சி முறையிலும் சமுதாயத்தைப்பாதிக்கும் உண்மை-நாணயம்-ஒழுக்கமாகிய கூறுகளைப் பேணிக்காக்க வேண்டும் என்னும் முனைப்பு இல்லை. பக்தி நெறிக்கு மக்கள் காட்டும் ஆர்வமும் செயற்பாடுகளும்- உண்மையோடு வாழ்வதற்கு நேர்மையோடு வாழ்வதற்கும் காட்டப்படுவதில்லை.
பெரியாரின் இப்புதிய சிந்தனையால் பக்தி நெறிக்கிருந்த தலைமைத் தன்மை அடிபட்டு விடுகிறது. தனிப்பட்ட மனிதரோ கவலைப்பட வேண்டியதில்லை. அவரவர் நோக்கத்துக்குப பக்தி நெறி மேற்கொள்ளுவதையோ மேற்கொள்ளாத்தையோ விட்டுவிடலாம் என்பது தெற்றெனப் புலனாகின்றது அதோடு இன்றியைமாயத தேவைகளாக உள்ளவற்றை மக்களிடையே நிலவ அரசமைப்புக்கள் முனைந்து செயல்பட வேண்டுமென்பதும் புலனாகின்றது. தனிப்பட்டவர்களும் இவைகளைப் பேணிக்காக்க வேண்டும் என்பதும் புலனாகின்றது.
உண்மை, நாணயம், ஒழுக்கமாகிய கூறுகள் பக்தர்களில் பெரும்பாலோரிடையே இல்லை அடியவர்களிடமும் அப்படியே. இவர்ள் வணங்கும் கடவுள்களிடமோ அறவே இல்லை என்பைதை மேல நான் விளக்கியுள்ளேன்.
இதுகாறும் யான் காட்டியன கொண்டு கடல்போலப் பரந்தும், விரிந்தும், கிடக்கும்பெரியாரின் சிந்தனைகளை நீங்களும் கண்டு ஆய்ந்து அவ்வழி நிற்க முயலவேண்டுமெனக் கேட்டுக் கொண்டு என்னுரையை முடிக்கின்றேன்.
